நான்கரை ஆண்டாக இருந்த பதற்றம் திடீரென தணிப்பு; சீனாவுடனான உறவை மீண்டும் மோடி புதுப்பிப்பது ஏன்?: சர்வதேச விவகாரங்களுக்கு மத்தியில் ரஷ்யாவில் நடந்த திருப்பம்

3 weeks ago 3

புதுடெல்லி: நான்கரை ஆண்டாக இந்தியா – சீனா இடையே இருந்த பதற்றம் திடீரென தணிக்கப்பட்ட நிலையில், சீனாவுடனான உறவை மோடி மீண்டும் புதுப்பிப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச விவகாரங்களுக்கு மத்தியில் ரஷ்யாவில் நடக்கும் பிரிக்ஸ் மாநாடு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் முதல் இந்திய – சீன எல்லையில் இரு நாடுகளின் ராணுவ வீரர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஜூன் 19ம் தேதியில் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்; 40க்கும் மேற்பட்ட சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். இருந்தாலும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம், இதுவரை தனது படையினரின் மரணத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

கல்வானில் நடந்த மோதல் சம்பவத்திற்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையிலான உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்தது. கிட்டத்தட்ட கடந்த 4 ஆண்டுகளாக இந்த பதற்றம் இருந்து வருகிறது. இரு தரப்பிலும் அதிகளவிலான ராணுவ துருப்புக்கள் நிலை நிறுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக டெம்சவுக், டெப்சாங் எல்லைப் பகுதியில் தீவிர ரோந்தும் இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை தணிக்க இரு தரப்பு மூத்த ராணுவ அதிகாரிகள் மத்தியில் 4 ஆண்டுகளாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரு நாடுகளும் நிலை நிறுத்தி வைத்திருந்த எல்லைக்கே மீண்டும் சென்று விட வேண்டும் என்று புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த முடிவால் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை வெகுவாக குறைக்கும் என்று கூறுகின்றனர். முன்னதாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ராணுவத் தளபதி உபேந்திரா திவேதி, ‘ஏப்ரல் 2020ம் ஆண்டுக்கு முன் இருந்த நிலைக்கு தற்போதைய நிலைமையை மாற்ற விரும்புகிறோம். அதன்பிறகே, படை விலக்கல் குறித்து ஆராய்வோம். ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்ப்பதற்கான நம்பிக்கையை நாங்கள் உருவாக்கி வருகிறோம். ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது நம்பிக்கை கட்டியெழுப்பப்படுவதை நாங்கள் பார்ப்போம்’ என்றார்.

அதேபோல் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அளித்த ேபட்டியில், ‘இந்தியா – சீனா இடையே பேச்சுவார்த்தை நடத்த உள்ள அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்து வருகின்றனர். இதில் இந்தியாவும் சீனாவும் எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இது 2020ம் ஆண்டில் எழுந்த பிரச்னைகளைத் தீர்க்கும். இதில் நாங்கள் அடுத்தகட்ட நகர்வுக்கு முயற்சி செய்வோம்’ என்றார். இதே கருத்தை சீன வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்தது.

ரஷ்யாவில் நடக்கும் 16-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்வதற்கு முன்னதாக, எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே ரோந்துப் பணிகளை மேற்கொள்வது குறித்த அறிவிப்பு வந்தது. அதனால் இன்று நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில், பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே இன்று இருதரப்பு சந்திப்பு நடைபெற உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் விக்ரம் மிஸ்ரி உறுதி செய்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – காசா – லெபனான் – ஈராக் இடையிலான போர், காலிஸ்தான் அமைப்பினரை முன்வைத்து கனடாவுடனான இந்திய உறவு சிக்கல் உள்ளிட்ட விவகாரங்கள் சர்வதேச அளவில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. இந்திய உளவுத்துறை ‘ரா’-வின் செயல்பாடுகள் மீது கனடாவுக்குச் சந்தேகங்கள் ஏற்பட்டதன் தொடர்ச்சியில் உண்டான உரசல், இந்திய அரசின் மீது நம்பிக்கையின்மையாக மாறியிருக்கிறது. தூதர்களின் வெளியேற்றம் வரை நடந்துவிட்டது. கனடா விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைபாடு இந்தியாவுக்கு எதிராக உள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்யாவில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாடு உலகம் முழுவதும் நிலவும் அச்சுறுத்தல்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் நடக்கும் போர்களுக்கு மத்தியில் முக்கியமானதாக உள்ளது. ஆசியாவின் இரு முன்னணி நாடுகளாக இந்தியாவும், சீனாவும் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேசையில் அமர்ந்து முறைப்படி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால், இதனை அமெரிக்காவும் உற்று நோக்குகிறது. சீன அதிபர் ஜின்பிங்கும் மோடியும் இதற்கு முன்பு 2019ல் பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சந்தித்தனர். அதன்பின் தற்போது தான் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சந்திக்கின்றனர்.

கனடாவுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உள்ள நிலையில், சீனா – இந்தியா இடையிலான உறவுகள் மேம்பட்டால், மேற்கத்திய நாடுகளுடனான உறவை இந்தியா சார்ந்திருப்பது பெரிய அளவில் குறையும் என்று கூறப்படுகிறது. இந்தியா – சீன எல்லை விவகாரத்தில், ஒன்றிய அரசு மீது தொடர்ந்து காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வந்தது. சமீபத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பதற்றத்தை குறைக்க எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உடன்பாடு ஒப்பந்தத்தின் முழு விவரங்களை அறிய விரும்புகிறோம். அதே வேளையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒருமுறை கூட எல்லைப் பிரச்னை குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்றத்தில் வாய்ப்பளிக்கப்படவில்லை. கடந்த 2020 ஜூன் 19ம் தேதி அன்று நாட்டை பலவீனப்படுத்திய பிரதமரை மறக்க முடியுமா?’ என்று விமர்சித்துள்ளார்.

எதிர்கட்சிகளின் தொடர் விமர்சனங்களுக்கு மத்தியில், இந்தியா – சீனா இடையிலான உறவை மீண்டும் புதுப்பிப்பதற்கான சூழலை இரு நாடுகளும் எடுத்துள்ளன. இதில் முக்கிய பங்குதாரராக ரஷ்ய அதிபர் புடின் செயல்பட்டுள்ளதாகவும், அவர் ரஷ்யா – சீனா – இந்தியா ஆகிய மூன்று ஆசிய நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்பட வேண்டும் என்றும், அதன்மூலம் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்று விரும்புவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

The post நான்கரை ஆண்டாக இருந்த பதற்றம் திடீரென தணிப்பு; சீனாவுடனான உறவை மீண்டும் மோடி புதுப்பிப்பது ஏன்?: சர்வதேச விவகாரங்களுக்கு மத்தியில் ரஷ்யாவில் நடந்த திருப்பம் appeared first on Dinakaran.

Read Entire Article