நான் விரைவில் அரசியலில் இணைவேன்: ராபர்ட் வதேரா பரபரப்பு பேட்டி

1 month ago 5

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் மற்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேராவின் நிறுவனம், கடந்த 2007-08-ம் ஆண்டில் நில பேரத்தில் முறைகேடாக நடந்து கொண்டது என எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை இயக்குநரகம் அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

அரியானா மாநிலம், குருகிராம் அருகில் உள்ள சிகோபூர் என்ற இடத்தில் 3.5 ஏக்கர் அளவிலான நிலம் ஒன்றை விலைக்கு வாங்கிய ராபர்ட் வதேரா அதனை, தன்னுடைய அரசியல் அதிகாரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, ரூ.58 கோடிக்கு டி.எல்.எப். நிறுவனத்திற்கு விற்பனை செய்து விட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது.

டி.எல்.எப். நிறுவனத்திடமிருந்து சொத்துகளை வாங்க அதிக அளவில் சலுகை எதிர்பார்த்திருக்கிறார் என 2011-ம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருந்தார். அரியானாவில் நிலம் வாங்கி விற்பனை செய்யப்பட்டதில் பணமோசடி நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

அமலாக்கத்துறை இதற்காக ஏற்கனவே கடந்த 8-ந்தேதி ராபர்ட் வதேராவுக்கு ஒரு முறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அந்த சம்மனுக்கு வதேரா ஆஜராகவில்லை. இதனையடுத்து 2-வது முறையாக அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. இதன்படி, அவர் நேற்று ஆஜரானார்.

தொடர்ந்து இன்று 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார். இதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் இன்று அளித்த பேட்டியின்போது, எப்போதும் மக்களுக்காகவே போராடும் காந்தி குடும்பத்தின் ஒரு நபராக இருக்கிறேன் என்பதற்காக, என்னை இலக்காக்கி இருக்கின்றனர். நான் விரைவில் அரசியலில் இணைவேன் என்றார்.

இந்த வழக்கில் இருந்து அரியானா அரசு முழு அளவில் என்னை விடுவித்த பின்னரும், இவை எல்லாம் நடந்து வருகின்றன. பா.ஜ.க.வில் நான் இருந்திருந்தால் நிலைமை வேறு வகையாக இருந்திருக்கும். பா.ஜ.க. தலைவருக்கோ அல்லது மந்திரிக்கோ சம்மன் அனுப்பப்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர்கள் என்னுடைய குடும்பம் மீதும், மாமியார் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீதும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். நீங்கள் எந்தளவு தொந்தரவு செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு நாங்கள் வலுப்படுவோம். எங்களுடைய வழிகளில் வரும் எதற்கு எதிராகவும் நாங்கள் எதிர்த்து போராடுவோம் என வதேரா கூறியுள்ளார்.

அரசால் விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்பது துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது என்றும் அவர் கூறியுள்ளார். நான் மக்களின் குரலாக மாறியிருக்கிறேன் என அவர்கள் பார்க்கிறார்கள். நான் ஏறக்குறைய தன்னார்வலராகி விட்டேன். ஏனெனில் அரசுக்கு நான் பதிலளித்து வருகிறேன்.

எனக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தொடர்ந்து நான் போராடி வருகிறேன். மக்கள் என்னுடன் இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு சேவை செய்து வருகிறேன்.

நான் அரசியலுக்கு வருவதற்காக மக்கள் விரும்புகிறார்கள். அரசியலுக்கு வந்தால், மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன். நான் நிச்சயம் அரசியலுக்கு வரக்கூடிய காலம் வரும். உண்மை வெளிவரும் என எனக்கு தெரியும் என அவர் உறுதியாக கூறியுள்ளார்.

Read Entire Article