சென்னை,
'ரங்கூன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அமரன்' படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் சுமார் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. மேலும் ஓ.டி.டி.யில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பல படங்களில் கமிட்டாகி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இவர் நடிகர் தனுஷை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். அதனை தொடர்ந்து பாலிவுட்டிலும் ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இந்த நிலையில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அமரன் படம் 100 நாட்களை நெறுங்கி விட்டது என தெரிவித்திருந்தார். மேலும் நான் சினிமாவுக்கு வர முதல் காரணம் மணி ரத்னம் சார் தான். முதலில் உங்களை நான் சந்தித்து போட்டோ எடுக்க வேண்டும் என நான் விரும்பினேன், 2005ல் அதை எடுக்கவும் செய்தேன். ஆனால் அது தொலைந்துவிட்டது.
மீண்டும் உங்களுடம் போட்டோ எடுத்துக் கொள்ள எனக்கு இரண்டு தசாப்தங்கள் மற்றும் இரண்டு படங்கள் தேவைப்பட்டன. மேலும் அமரன் படத்திற்கும், எனக்கும் நீங்கள் அளித்த ஊக்குவிப்புக்கு நன்றி. மணிரத்னம் சார் அவர்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.