நான் கோயிலுக்கு போவதில்லை… கடவுள்கள் என் உணவகத்தில்தான் இருக்கிறார்கள்!

3 months ago 7

நன்றி குங்குமம் தோழி

சங்கீதா உணவகம் உரிமையாளர் சுரேஷ் பத்மநாபன்

சைவ உணவகங்கள் பல இருந்தாலும், தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி… கடந்த 40 வருடங்களாக மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் உணவகம்தான் சங்கீதா சைவ உணவகம். பல கஷ்டங்களை கடந்து, தன் 22 வயதில் இந்த உணவகத்தை ஆரம்பித்தார் சுரேஷ் பத்மநாபன். அதன் பிறகு தன் அண்ணன் ராஜகோபால் அவர்களுடன் இணைந்து படிப்படியாக தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் தன் உணவகத்தினை விரிவுபடுத்தியுள்ளார். இவர்கள் இருவரின் வாரிசுகளும் அடுத்த தலைமுறையாக உணவகத்தினை நிர்வகித்து வருகிறார்கள்.

‘‘நான் சங்கீதா ஆரம்பிச்சு 40 வருஷமாச்சு. பிறந்தது, வளர்ந்தது எல்லாம் ேகரளா திருவனந்தபுரம். அப்பா அங்க ஒரு உணவகம் நடத்தி வந்தார். எனக்கு படிப்பு மேல ஈடுபாடில்லை. அப்பாவின் கடையில் வேலை பார்க்க ஆரம்பிச்சேன். அண்ணன் சென்னையில் சாட்டட் அக்கவுன்டென்ட் படிச்சிட்டு இருந்தார். கேரளாவில் உணவகம் நடத்துவது அவ்வளவு சுலபமில்லை. எல்லாவற்றுக்கும் யூனியன் அமைத்து ஸ்டிரைக் செய்வாங்க. அதனால் பிழைப்பைத் தேடி சென்னைக்கு 1979ல் வந்து, ஒரு ஓட்டல் ஆரம்பிச்சோம். கடுமையா உழைச்சேன். அதனை தொடர்ந்து இரண்டாவது உணவகமும் திறந்தோம். ஆனால் எங்களால் இரண்டையும் சக்சஸா நடத்த முடியல. காரணம், சென்னை மக்களின் தேவைக்கேற்ப ஓட்டல் நடத்த தெரியல.

வேலையும் இல்ல, ெதாழிலும் போச்சு, வீட்டை சமாளிக்கணும். நான் என் தாய்மாமா ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தேன். அப்பாவும் வேலைக்கு போனார். ஆரம்பத்தில் கஷ்டமா இருந்தது. இருவர் சம்பாத்தியத்தில் வீட்டில் ஆறு பேர் சாப்பிடணும். பிறகு மாமாவின் உதவியால், ஓட்டல் ஒன்றில் பார்ட்னரா இணைந்தோம். எங்களின் நிலையும் உயர்ந்தது. நான் கிச்சனில் வேலை கத்துக்கிட்டேன். ஆனால் அதுவும் நிலைக்கல. என் மேல பழி போடப்பட்டது.

இதற்கிடையில் அப்பாவும் வேறு ஓட்டல் துவங்க நான் அங்கு வேலைக்கு சேர்ந்தேன். காலை 5 மணிக்கு கடையை திறப்பேன். அப்பா வந்ததும், நான் கிச்சனுக்குள் போனா, இரவு 11 மணி வரை அங்கு வேலை இருக்கும். எனக்கு நண்பர்கள் கிடையாது. ஓட்டல் மட்டும்தான் என் வாழ்க்கை. இதில் வெளி அனுபவம் வேண்டும் என்று நினைத்தேன். வீட்டில் சொல்லிட்டு கையில் ரூ.150 எடுத்துக் கொண்டு, பையில் ஒரு சட்டை, வேஷ்டியுடன் ரயில் ஏறி கொச்சின் போனேன்.

அங்கு ஒரு ஓட்டலில் வேலைக்காக முதலாளியிடம் கேட்ட போது, அவர் மறுநாள் வரச்சொன்னார். நான் காலை 7.30 மணிக்கெல்லாம் கடையில் காத்திருந்தேன். என்னைப் பார்த்தவர் உள்ளே போய் வேலை பார்க்க சொன்னார். காலை முதல் மாலை வரை சர்வீசில் இருப்பேன். இரவு கிச்சனைப் பார்ப்பேன்.

ஒரு நாள் தோசை சுடும் போது எண்ணையில் கால் வழுக்கி தோசைக்கல் மேல விழுந்துவிட்டேன். உடம்பெல்லாம் புண்ணாகிடுச்சு. மூன்று நாட்களில் ஓணம் பண்டிகை. அந்தக் காயம் மற்றும் வலியுடன்தான் ஓணம் பண்டிகைக்கான வேலையை பார்த்தேன். அதன் பிறகு நாகர்கோவில். அங்குள்ள ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தேன். ஆனால் ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரு சிறிய அறையில் மூன்று பேர் தங்கியிருந்தோம். சரியா தூங்க முடியாது. அதன் பிறகு கொச்சின் போன போது, அப்பாவும் மாமாவும் என்னை தேடி வர மீண்டும் சென்னைக்கு வந்தேன்’’ என்றவர் சங்கீதா ஆரம்பித்த அந்தத் தருணத்தை பகிர்ந்தார்.

‘‘சென்னையில் மாமா மற்றும் அப்பா இருவரும் சேர்ந்து ஓட்டல் ஒன்றை எனக்கு வைத்து கொடுத்தாங்க. ஆனால் அங்கிருந்த வடிகால் பிரச்னையால் பொருட்கள் வீணானது. அதனால் வேற இடத்தில் அமைக்க திட்டமிட்டேன். அப்படி அண்ணாசாலையில் 1985ல் துவங்கப்பட்டதுதான் சங்கீதா. இந்தப் பெயர் வைக்க காரணம், எனக்கு இசை பிடிக்கும். எம்.எஸ். அம்மா, ஜேசுதாஸ் அவர்களின் குரலுக்கு நான் அடிமை. விடுமுறை நாட்களில் இவர்களின் பாடல்கள்தான் எனக்கு துணை. அந்தக் காரணத்தால் சங்கீதா என பெயர் வைத்தேன். அவர்களின் சங்கீதம் என் மனசை இதமாக்குவதைப் போல் என் உணவு வயிற்றுக்கு இதமளிக்க வேண்டும் என்ற தாரக மந்திரத்தை இன்று வரை கடைபிடிக்கிறேன்.

இதற்கிடையில் அண்ணனும் என்னுடன் இணைந்ததால் அவருக்கு ஒரு கிளை அமைத்துக் கொடுத்தேன். இப்போது 52 கிளைகளில் சங்கீதா இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு என் குடும்பத்தினர் மட்டுமில்லாமல் என்னுடைய ஆசான் சரவணபவன் அண்ணாச்சி அவர்கள் முக்கிய காரணம்’’ என்று குறிப்பிட்டார்.

‘‘நண்பர் ஒருவரால்தான் அண்ணாச்சி அறிமுகமானார். 91ல் பாரிஸில் அவர் கடையை திறந்த போது எங்களின் முதல் சந்திப்பு ஏற்பட்டது. அதன் பிறகு நாங்க சந்திக்க நேரம் காலமே கிடையாது. இரவு 11.30க்கு அவரை பார்க்க வீட்டுக்கு போகும் போது தொழில் சார்ந்து நிறைய பேசுவோம். என் ஓட்டலில் ஒரு உணவு சரியாயில்லைன்னு சொன்னா, உடனே ஆட்களை அனுப்பி சரி செய்வார். ஒரு உணவிற்கு என்ன விலை நிர்ணயிக்கலாம் என்பதை கூட நாங்க டிஸ்கஸ் செய்திருக்கிறோம்.

மக்களுக்கு கொடுக்கும் உணவின் விலை நியாயமா இருக்கணும்னு சொல்வார். மக்களின் தேவைகளை அறிந்து மினி காபி, மினி டிஃபன், க்விக் லஞ்ச் ஆரம்பிச்சார். உழைப்பாளர்களின் வாழ்வாதாரமும் அவர் காலத்தில்தான் உயர்ந்தது. அவருடன் நிறைய ஓட்டலுக்கு சென்றிருக்கிறேன். அங்குள்ள சுவையான உணவினை எங்க கிச்சனில் செய்து பார்த்து பிறகு அறிமுகம் செய்வோம். அந்தப் பழக்கத்தை இன்றும் நான் கடைபித்து வருகிறேன். ஒவ்வொரு உணவும் எந்த பதத்தில் இருக்கணும்னு சொல்வார். உதாரணத்திற்கு சாதம் பூப்போல் மலர்ந்து வெள்ளை நிறத்தில் உதிரி உதிரியா வெந்திருக்கணும். சாப்பிட்டா வயிறு உப்புசம் ஏற்படக்கூடாது.

எண்ணை முதல் மளிகைப் பொருட்களின் தரத்தில் காம்பிரமைஸ் கிடையாது. மக்கள் கொடுக்கும் காசுக்கு ஆரோக்கியமான உணவினை கொடுக்கணும். இப்படி நிறைய விஷயம் அவரிடம் கற்றுக்ெகாண்டிருக்கிறேன். அதே போல் என்னை நாடி வருபவர்களுக்கும் நான் உதவியிருக்கிறேன். அவர் இப்போது இல்லை. ஆனால் அவரை நினைக்காத நாளில்லை. என் உணவினை யாராவது பாராட்டினால், அதற்கு முக்கிய காரணம் அவர்தான். அவர் இடத்தினை யாராலும் நிரப்ப முடியாது’’ என்றவர் தன் உணவகத்தில் உள்ள உணவுகள் மற்றும் கிளைகள் குறித்து பகிர்ந்தார்.

‘‘எங்க உணவகத்தில் காபி மிகவும் பிரபலம். பல பிரபலங்கள் எங்களின் அடையார் கிளை உணவகத்திற்கு இதற்காகவே வருவது வழக்கமாகக் கொண்டிருக்காங்க. ஓணம் ஓணம் சத்யா எங்களின் சிக்னேச்சர் உணவு. அந்த உணவினை அவர்களின் முறைப்படி கொடுக்க வேண்டும் என்பதால், எங்க சமையல் நிபுணர்களை திருவனந்தபுரம் அனுப்பினோம். இந்த உணவு மட்டுமில்லை. சாதாரண தட்டுக்கடை முதல் நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் சுவையான உணவினை மக்களுக்கு கொடுக்க முயற்சி செய்து வருகிறோம். வாடிக்கையாளர்களும் எங்களுக்கு ஃபீட்பேக் தருவாங்க. சொல்லப்போனால் எங்களின் வளர்ச்சிக்கு அவர்கள்தான் முக்கிய காரணம். அவர்களை நான் கடவுளாகத் தான் பார்க்கிறேன்.

என் உணவகத்தில் உள்ள மாஸ்டர்கள் கடந்த 30 வருடத்திற்கு மேலாக உடன் பயணிக்கிறார்கள். இப்படித்தான் உணவகம் இயங்க வேண்டும் என்ற நான் சில கேட்பாடுகளை கடைபிடிப்பதால்,
ஒவ்வொரு உணவினையும் தரமாக கொடுக்க முடிகிறது. நான் இந்த துறைக்கு கட்டாயத்தின் பேரில்தான் வந்தேன். எனக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம். இதுதான் என் துறை என்றான பிறகு அதை நான் நேசிக்க ஆரம்பிச்சேன். பணம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால், அதிக காலம் நிலைக்க முடியாது. செய்யும் ெதாழிலை கோயிலா மதிக்கணும். நான் கையில் காசு பார்க்க 23 வருஷமாச்சு’’ என்றவர் தங்களின் புது கிளைகள் குறித்து பகிர்ந்தார்.

‘‘தி.நகர் மற்றும் மேடவாக்கத்தில் புதிய ஸ்டைல் மற்றும் உள்ளலங்காரத்தில் உணவகத்தினை அமைத்திருக்கிறோம். ஸ்டைலான உணவகத்தில் பலருக்கு சென்று சாப்பிட விருப்பம் இருக்கும். ஆனால் உணவின் விலை அதிகம் என்ற தயக்கம் இருக்கும். ஸ்டைலான ஓட்டலில் அனைவரும் சாப்பிடக்கூடிய விலையில் உணவினை வழங்க வேண்டும். அதற்காகவே இந்தக் கிளைகளை அமைத்தோம். உள்ளலங்காரத்தினை பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறோம். அதே போல் சென்னை அண்ணாநகரில் சங்கீதா தேசி மேனியா என்ற பெயரில் சைனீஸ்,
வட இந்தியா மற்றும் தென்னிந்திய உணவுகளை வழங்கி வருகிறோம்.

சங்கீதா தனிப்பட்ட உணவகமாகவும் பிரான்சைசி முறையிலும் இயங்கி வருகிறது. இந்தத் ெதாழிலுக்கு வர விரும்புபவர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தி தர பிரான்சைஸ் அமைத்து கொடுத்தேன். ஆனால் அவர்கள் அதனை சரியான பாதையில் கொண்டு செல்லவில்லை என்று தெரிந்ததும் பிரான்சைசில் இருந்து விலகிட்டோம். மேலும் எங்களின் பிராண்ட் பெயரை குறிப்பிடும் வகையில் மற்றவர்கள் தங்களின் உணவகத்தின் பெயரை அமைக்கக் கூடாது என்பதிலும் நாங்க உறுதியாக இருக்கிறோம்’’ என்றார் சுரேஷ்.

சஞ்சனா சுரேஷ் (நிர்வாக இயக்குனர், சங்கீதா உணவகம்)

‘‘எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் அடையார் கிளையில்தான் வளர்ந்தேன். இது என்னுடைய இரண்டாவது வீடு. சமையல் மாஸ்டர்தான் சாப்பாடு பார்த்து பார்த்து கொடுப்பார். அப்பாவின் தோளிலும், ஓட்டல் சூழலிலும் வளர்ந்ததால், எனக்கும் அப்பாவைப் போல் அதே துறையில் வரணும்னு ஆசை வந்தது. அப்பாவிடம் சொன்ன போது இது கஷ்டமான துறை… இங்கு சர்வைவ் செய்வது கஷ்டம் என்றார். நான் பிடிவாதமாக இருந்தேன்.

அப்பாவும் என் உறுதியை பார்த்து தரமணியில் உள்ள கல்லூரியில்தான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சேன். அதன் பிறகு செஃப்புக்கான தனிப்பட்ட பயிற்சி எடுத்தேன். இப்போது ஓட்டலை நிர்வகிக்க தெரிந்துகொள்ள ஐதராபாத்தில் பிசினஸ் மேனேஜ்மென்ட் படிக்கிறேன்.அப்பாவைப் போல் உணவினை சுவைக்கும் திறன் எனக்கும் இருக்கு. கொஞ்சம் மாறுபட்டாலும் நான் கண்டுபிடிச்சிடுவேன். அது எனக்கு அப்பா கொடுத்த கிஃப்ட். நான் வசதியாக பிறந்திருந்தாலும், அப்பா எனக்கு எல்லா கஷ்டமும் தெரியணும்னு ரொம்ப சாதாரணமாதான் வளர்த்தார். டிரெயினில்தான் கல்லூரிக்கு போவேன். அரசுக் கல்லூரியில் படிச்சேன். சமையல் துறையில் பயிற்சி பெற ஒரு ஓட்டலில் வேலை பார்த்தேன்.

அங்க நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். இப்போது நானும் என் சகோதரரும் (பெரியப்பா மகன்) அப்பாக்களின் வழியினை பின்பற்றி இந்த துறையில் கால் பதித்திருக்கிறோம். முழுக்க முழுக்க தென்னிந்திய உணவகமாக இருந்த எங்க உணவகத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம். அதன் முன்னோடிதான் சங்கீதா தேசி மேன்யா. இங்கு தென்னிந்திய உணவுகள் மட்டுமில்லாமல் வட இந்தியா மற்றும் சைனீஸ் போன்ற உணவுகளும் எல்லோரும் சாப்பிடக்கூடிய விலையில் கொடுக்கிறோம். மேலும் புது உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டும்.’’

தொகுப்பு : ப்ரியா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

The post நான் கோயிலுக்கு போவதில்லை… கடவுள்கள் என் உணவகத்தில்தான் இருக்கிறார்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article