
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஆன ரகானே கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் அவர், மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப போராடி வருகிறார். இவரது தலைமையில் 2020/21 பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது.
இந்நிலையில் தனக்கு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் உள்ளதாக ரகானே தெரிவித்துள்ளார். அதற்காக தொடர்ந்து முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், "நான் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. இந்த நேரத்தில், நான் என் கிரிக்கெட்டை ரசிக்கிறேன். சில நாட்களுக்கு முன் நான் மீண்டும் பயிற்சியை தொடங்கி உள்ளேன். அது என்னை பிட்டாக வைத்துக்கொள்ள உதவும். இது என்னால் கட்டுபடுத்தக்கூடிய விஷயங்கள்.
ஒரு வீரராக என்னால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள் உள்ளன. வெளிப்படையாகச் சொன்னால், என்னை அணியில் சேர்க்க வேண்டி தேர்வாளர்களுடன் உரையாட முயற்சித்தேன். ஆனால் எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஒரு வீரராக என்னால் செய்ய முடிந்த விஷயம் விளையாட வாய்ப்பு கிடைக்கும்போது சிறப்பான ஆட்டத்தை கொடுப்பது மட்டுமே" என்று கூறினார்.