நான் அதிரடியாக விளையாட இதுதான் காரணம் - நிக்கோலஸ் பூரன்

1 week ago 5

கொல்கத்தா,

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற 21வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 238 ரன்கள் குவித்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 36 பந்தில் 87 ரன் எடுத்தார்.

தொடர்ந்து 239 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த கொல்கத்தா 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 4 ரன் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருது நிக்கோலஸ் பூரனுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் பேட்டி அளித்த போது நீங்கள் எப்படி எளிதாக சிக்சர்கள் அடித்து அதிரடியாக விளையாடுகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த பூரன் கூறியதாவது, இந்தக் கேள்வி என்னிடம் லட்சம் முறை கேட்கப்பட்டு விட்டது. இதற்காக நான் நிறைய பயிற்சி செய்கிறேன். அதையும் தாண்டி நிறைய சமயங்களில் அனைத்தும் எனக்கு இயற்கையாகவே வருகிறது. போட்டியில் என்ன தேவை என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். பவுலர்கள் எப்படி பவுலிங் செய்யப் போகிறார்கள் என்பதை அறிந்து அதற்குத் தகுந்தார் போல் நீங்கள் வேலை செய்ய வேண்டும்.

மார்ஷ், மார்க்ரம் ஆகியோர் எங்களுக்கு தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பார்ட்னர்ஷிப் அமைப்பதில் அசத்தும் அவர்கள் புதிய பந்தில் நிதானமாக விளையாடி அணிக்கு என்ன தேவையோ அதைச் செய்கிறார்கள். ஆட்டத்தை நன்றாக துவங்கி அதைப் பயன்படுத்தி தொடர்ந்து அசத்துவதே எனது வேலை. தொடர்ச்சியாக வரும் வாய்ப்புகளில் நான் தொடர்ந்து மகிழ்ச்சியாக ரன்கள் குவிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article