
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுபவர் சுனில் கவாஸ்கர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.
இந்நிலையில் 1986-ம் ஆண்டுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் முடிவை எடுத்திருந்ததாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அப்போது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் இன்னுமொரு வருடம் விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கவாஸ்கர் கூறியுள்ளார். அவருடைய நட்பான கோரிக்கைக்கு இணங்கி விளையாடியதன் காரணத்தாலேயே தம்மால் 10 ஆயிரம் ரன்கள் அடித்து உலக சாதனை படைக்க முடிந்ததாகவும் கவாஸ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "10000 மைல்கல்லை தொட்டது அற்புதமான உணர்வு" "என்னுடைய கெரியரை தொடங்கியபோது நான் 10,000 ரன்கள் அடிப்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. சொல்லப்போனால் 1000 ரன்கள் அடித்தாலே மகிழ்ச்சியாக இருப்பேன் என்று தான் கெரியரைத் தொடங்கினேன். 10 ஆயிரம் ரன்கள் அடிக்க வேண்டும் என்பது என்னுடைய இலக்காக இல்லை. யார் மேலே சென்றாலும் டென்சிங் நார்கே மற்றும் எட்மண்ட் ஹிலாரி ஆகியோர்தான் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் நபர்களாக நினைவு கொள்ளப்படுகிறார்கள்.
அதே போல 10 ஆயிரம் ரன்களை அடித்த முதல் நபரும் நினைவு கொள்ளப்படுவார்கள். அந்த பொன்னான சாதனையை செய்யும் வாய்ப்பு இம்ரான் கான் எனும் ஒருவரால் மட்டுமே எனக்கு கிடைத்தது. 1986-ம் ஆண்டு இங்கிலாந்தில் லண்டனில் இருக்கும் ஒரு இத்தாலியின் உணவகத்திற்கு நானும் அவரும் சாப்பிடச் சென்றோம். அப்போது அதுவே எனது கடைசித் தொடர் என்று அவரிடம் சொன்னேன்.
அதற்கு இல்லை இல்லை நீங்கள் ஓய்வு பெற முடியாது? என்று அவர் சொன்னார். ஏன் முடியாது? அது என்னுடைய முடிவு என்று அவரிடம் சொன்னேன். அதற்கு அடுத்த வருடம் இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி வரும்போது நீங்கள் இல்லாத அணியை தோற்கடிக்க விரும்பவில்லை என்று இம்ரான் சொன்னார். அதற்கு அந்தத் தொடர் பற்றிய அறிவிப்பு ஐசிசி-யிடமிருந்து வரவில்லையெனில் நான் ஓய்வு பெறுவேன் என்று சொன்னேன். கடைசியில் அவர் சொன்னது போலவே அந்தத் தொடர் பற்றிய அறிவிப்பு வந்தது. ஒருவேளை அப்போதே ஓய்வு பெற்றிருந்தால் 9200 - 9300 ரன்களுடன் விடைபெற்றிருப்பேன். ஆனால் இம்ரான் சொன்னதால் 10000 ரன்களை தாண்ட முடிந்தது. பாகிஸ்தானுக்கு முன்பு 2 தொடர்களும் விளையாடினேன்" என்று கூறினார்.