திருவனந்தபுரம்,
மலையாள திரை உலகில் சமீப காலமாக இரண்டு கதாநாயகிகள் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறார்கள். வெற்றி படங்களில் நடித்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் மமிதா பைஜு இன்னொருவர் அனஸ்வரா ராஜன்.
அனஸ்வராவும் மமிதாவும் 'சூப்பர் சரண்யா' என்கிற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் இருவருமே வளர்ந்து வருவதால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது இல்லை என்று இணையத்தில் செய்தி பரவியது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அனஸ்வரா ராஜன் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அப்போது அவர் கூறுகையில்,
"நானும் மமிதா பைஜுவும் இதயபூர்வமான நட்புடன் பழகி வருகிறோம். நாங்கள் போட்டியாளர்கள் அல்ல. இன்னும் சொல்லப்போனால் எங்கள் குரூப்பில் இருக்கும் மேத்யூ தாமஸ், நஸ்லேன், மமிதா உள்ளிட்ட அனைவருமே யாரும் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அதில் எப்படி சிறப்பாக எங்களை வெளிப்படுத்த முடியும் என்பதைதான் பார்க்கிறோம். எதனால் இப்படி ஒரு செய்தி பரவியது என்று தெரியவில்லை" என்றார்.