
மும்பை,
நடிகை தனுஸ்ரீ தத்தா விஷால் நடித்த 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர், ஹிந்தியில் 2009 ஆம் ஆண்டு வெளியான 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தில் நடிகர் நானா படேகருடன் சேர்ந்து நடித்திருந்தார். பிரபல இந்தி நடிகரான நானா படேகர் 'காலா' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு 'மீ டூ இயக்கம்' மூலம் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை நடிகைகள் உள்பட பல துறைகளில் உள்ள பெண்கள் வெளிப்படுத்தினர்.அப்போது, நடிகை தனுஸ்ரீ தத்தா 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' படத்தின் படப்பிடிப்பில் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டி இருந்தார்.
மார்ச் 23, 2008 அன்று நடந்ததாக சொல்லப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து 2018-ம் ஆண்டு அக்டோபரில் தனுஸ்ரீ தத்தா வழக்குப்பதிவு செய்தார்.இதில், தன்மீது அளிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நானா படேகர் விளக்கமளித்திருந்தார். இந்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு நீதிபதியிடம் முழு அறிக்கை சமர்ப்பித்த காவல்துறையினர் தனுஸ்ரீ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது எந்த குற்றமும் இல்லை என தெரிவித்தனர். மேலும், பதியப்பட்ட வழக்கு பொய்யானது என்றும் அதனை நிராகரிக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது. தனுஸ்ரீ தத்தா அதற்கு எதிராக மனுத் தாக்கல் செய்தார். மேற்கொண்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கை விசாரித்த அந்தேரி நீதிமன்ற நீதிபதி என்வி பன்சால், "2008-ல் நடைபெற்ற சம்பவத்திற்கு 2018ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் 354, 509 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு குற்றங்களுக்கும் குற்றவியல் விதிமுறைகளின்படி 3 ஆண்டு கால வரம்பு உள்ளது.குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் அமைப்புகள் குற்றத்தை விரைவாக கண்டறிந்து தண்டனை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள இந்தக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தாமதமாக வழக்குப்பதிவு செய்ததற்கான மன்னிப்பு விண்ணப்பம் மனுதாரரால் தாக்கல் செய்யப்படவில்லை. மனுதாரர் அதற்கான காரணத்தை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கவேண்டும்.
காலக்கெடு முடிந்து 7 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வழக்கை விசாரணை செய்ய எந்தக் காரணமும் இல்லை. இந்தக் காலதாமதத்தை காரணம் ஏதுமின்றி ஏற்றுக் கொண்டால் அது நியாயத்திற்கும் சட்டத்திற்கும் எதிராகிவிடும்.நிகழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பொய் என்றோ, உண்மை என்றோ நீதிமன்றத்தால் கூறமுடியாது. ஏனெனில், அதன் உண்மைத் தன்மை குறித்து நீதிமன்றம் விவாதிக்கவில்லை. எனவே, குறிப்பிட்ட காரணங்களுக்காக இதை நீதிமன்றம் விசாரிக்க முடியாது" எனத் தெரிவிக்கப்பட்டது
வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான சட்டத்தடை காரணமாக வழக்கை விசாரிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் இதுபோன்ற முடிவுகள், பல ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் குற்றங்களுக்கு எதிராக நீதிதேடும் பெண்களுக்கு சவால் விடுக்கும் வகையில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில் "நானா படேகர் மீதான எனது பாலியல் வழக்கு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. நீதிமன்ற வாதங்கள் மற்றும் விசாரணைகளுக்குப் பிறகு 2019 ல் மும்பை காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை நேற்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நானாவின் குழு வழக்கு மூடப்பட்டதாக இதுபோன்ற தவறான வதந்திகளைப் பரப்புகிறது. தயவுசெய்து நானாவின் பொய்களை நம்பாதீர்கள். நானா படேகர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும், அது அவருக்குத் தெரியும். இது ஊடகங்களையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்த நானா படேகரால் விதைக்கப்பட்ட போலி செய்தி.
அசல் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. தற்போதைய நீதிமன்ற விசாரணைகள் 2019ம் ஆண்டு காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட்டன, மேலும் அந்த சூழலில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எனது சட்டக் குழு அதை நிராகரித்து வாதத்தில் வெற்றி பெற்றது! இது எங்களுக்கு ஒரு சிறிய வெற்றி. ஆனால் நானா இந்த தீர்ப்பால் தவறான தகவல் பிரச்சாரம் செய்ய நிறைய பணம் செலவிடப்படுகிறது. அவர் மீதான வழக்கு முடிக்கப்படவில்லை. தயவுசெய்து உண்மை சரிபார்க்கவும்! " என்று குறிப்பிட்டுள்ளார்.