
செங்கல்பட்டு நகர போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட செங்கல்பட்டு டவுன் பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது 21) இவர் தனது பிறந்த நாளை நண்பரான தேவ் (22) மற்றும் மேலும் சிலருடன் கொண்டாடினார். கேக் வெட்டிய பின்னர் தேவ் தனது நண்பர் தீபக்குக்கு பிறந்த நாள் பரிசாக நாட்டு வெடிகுண்டை வழங்கி அதனை வீச சொல்லி உள்ளார்.
கையில் நாட்டு வெடிகுண்டை வாங்கிய தீபக் அதனை வீசி வெடிக்க செய்து வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தார். இந்த காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவிய நிலையில் அதனை பார்த்தவர்கள் போலீசாருக்கு வீடியோ காட்சிகளை பகிர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் தீபக்கை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். தன்னை தேடுவதை அறிந்த தீபக் தலைமறைவாக இருந்தார். தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு தீபக்கை போலீசார் தேடி வந்தனர். போலீசாரின் பிடியில் இருந்து தப்ப முயன்ற தீபக்கை போலீசார் துரத்தி செல்லும் போது கால் தவறி கீழே விழுந்ததில் அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீபக்குக்கு காலில் மாவு கட்டு போடப்பட்ட நிலையில் அவரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.