காவல்துறையையே சீரழித்துள்ள தி.மு.க. அரசுக்கு கண்டனம் - ஓ. பன்னீர்செல்வம்

3 hours ago 1

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பொதுமக்களுக்கு நண்பனாக விளங்கிக் கொண்டிருந்த காவல்துறையை ரவுடிகளின் நண்பனாக ஆக்கி சாதனை படைத்த ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி என்று சொன்னால் அது மிகையாகாது. இதன் விளைவாக, தமிழ்நாட்டில் ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.

சிவகங்கை மாவட்டம், பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜிக்குமார் அடித்து சித்ரவதை செய்யப்பட்டதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன், தனிப்படைப் பிரிவு காவலர் ராஜா குற்றப் பின்னணி உள்ளவர்களுடன் நேரடி தொடர்பில் உள்ளதாகவும், தன்னை சென்ற மாதம் 28-ம் தேதி மிரட்டியதாகவும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் அனுப்பி உள்ளார் என்றால், அந்த அளவுக்கு காவல்துறையினர் ரவுடிகளுடன் கை கோர்த்து செயல்படுகின்றனர். சட்டத்தின்படி செயல்படாமல் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்ற ரீதியில் காவல்துறையினர் செயல்படுவதாக சென்னை ஐகோர்ட்டே ஒரு பாலியல் வழக்கில் குற்றம் சாட்டியுள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப தமிழ்நாடு முழுவதும் இந்த நிலைமைதான் நீடிக்கிறது.

திண்டுக்கல்லில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நிர்வாகி வெட்டிக் கொலை; ஈரோட்டில் பிளஸ் 2 மாணவர் கொலை; திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெண்ணிடம் காவலர் ஆபாச சைகை; திருப்பூரில் தி.மு.க.வினர் கட்டப் பஞ்சாயத்து செய்து மிரட்டியதாக அ.தி.மு.க. நிர்வாகி தற்கொலை; கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே ரோகித் என்ற சிறுவன் கடத்திக் கொலை; கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பெண் காவலர் தற்கொலை; கள்ளக்குறிச்சி மாவட்டம், கடுவலூரில் முதியோரிடம் 211 சவரன் கொள்ளை, திண்டுக்கல் மாவட்டம், எரியோடு காவல் நிலையம் அருகே மூவர் அரிவாளால் வெட்டு, போரூர் காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றவரை காவலர் தாக்கியது, மயிலாடுதுறையில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை என பல சட்டம் ஒழுங்கு சீரழிவுகள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. வராத செய்திகள் இன்னும் எத்தனையோ! இதுபோன்ற செய்திகள்தான் நாள்தோறும் கொண்டிருக்கின்றனவே தவிர, மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய செய்திகள் வருவதாகத் தெரியவில்லை. மொத்தத்தில் தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது.

காவல்துறையினரும், பொதுமக்களும் நண்பர்கள் போல ஒன்றுபட்டு செயல்பட்டால் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனைப் பெற்றுத் தரலாம். ஆனால், காவல்துறையினரே குற்றவாளிகளுடன் பின்னிப்பிணைந்து செயல்படுவது என்பது கடும் கண்டனத்திற்குரியது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்று மக்கள் கேட்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது.

முதல்-அமைச்சர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தனிக் கவனம் செலுத்தி, காவல்துறையினருக்கு குற்றவாளிகளுடன் உள்ள தொடர்பினை அறவே ஒழித்து தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற வழிவகை செய்ய வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இந்த விடியா ஆட்சி விரைவில் வீழ்ந்து விடும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article