புற்றுநோய் ஆராய்ச்சி பணிகளுக்கு உதவும் வகையில், நாட்டிலேயே முதல்முறையாக புற்றுநோய்க்கான மரபணு வரைபடத்தை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: உலக அளவில் மிக ஆபத்தான உடல்நல பிரச்சினைகளில் ஒன்று புற்றுநோய். இந்தியாவில் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. 9 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. தற்போது புற்றுநோய் பாதிப்புடன் 14.61 லட்சம் பேர் வாழ்ந்து வருவதாக தேசிய புற்றுநோய் பதிவு திட்டம் கூறுகிறது. கடந்த 2022 முதல் ஆண்டுதோறும் இந்த பாதிப்பு 12.8 சதவீதம் அதிகரித்து வருகிறது.