இஸ்லாமாபாத்: பஹல்காமில் கடந்த மாதம் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை தயார்நிலையில் வைத்திருக்கின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் நேற்று இஸ்லாமாபாத்தில் உள்ள ஐஎஸ்ஐ தலைமையகத்துக்கு நேரில் சென்றார்.
அங்கு பிராந்திய பாதுகாப்பு முன்னேற்றங்கள், வளர்ந்து வரும் அச்சுறுத்தல், வழக்கமான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஹைபிரிட் போர் தந்திரோபாயங்கள் உள்ளிட்டவை குறித்து பிரதமருக்கு ஐஎஸ்ஐ அதிகாரிகள் விளக்கமளித்தனர். பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதை தடுக்கவும் தீர்க்கமாக பதிலளிக்கவும், தேசிய விழிப்புணர்வு, பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு,வலுப்படுத்தப்பட்ட செயல்பாட்டு தயார் நிலை ஆகியவற்றின் கட்டாயத்தை அப்போது பிரதமர் வலியுறுத்தினார்.
பிரதமருடன் துணைப்பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்பு துறை அமைச்சர் உள்ளிட்டோர் வந்திருந்தனர். பாகிஸ்தானின் கிழக்கு எல்லையில் இந்தியாவுடன் அதிகரித்து வரும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டில் வழக்கமான அச்சுறுத்தலுக்கு தயார் நிலையில் இருப்பதில் கவனம் செலுத்துவது மற்றும் நிலவி வரும் பாதுகாப்பு சூழல் குறித்த விரிவான செயல்பாடு குறித்தும் பிரதமர் இந்த ஆய்வின்போது அறிவுறுத்தினார்.
The post நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாக். பிரதமர் ஆய்வு appeared first on Dinakaran.