* 137 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் இயற்றிய சென்னை நகர சிறப்பு சட்டத்தின் கீழ் கமிஷனர் அருண் அதிரடி நடவடிக்கை
சென்னை: நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் முதல் முறையாக பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய ராக்கெட் ராஜா, நெடுங்குன்றம் சூர்யா, லெனின் ஆகிய 3 ரவுடிகள் மீது ஆங்கிலேயர்கள் 137 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றிய சென்னை நகர காவல் சட்டம் 51ஏ-ன் கீழ் சென்னைக்குள் ஓராண்டு நுழைய தடை விதித்து போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை மாகாணமாக இருந்த போது நாட்டிலேயே ஆங்கிலேயர்கள் முதல் போலீஸ் கமிஷனர் அலுவலகம் தொடங்கினர். அதேநேரம் நாட்டில் எந்த நகரங்களுக்கும் இல்லா அதிகாரம் சென்னை நகர காவல்துறைக்கு ஆங்கிலேயர்கள் வழங்கினர்.
குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1888ம் ஆண்டு கொலை, கலவரத்தை உருவாக்குவது, வன்முறையில் ஈடுபடுவது, கொடுங்குற்றங்களில் ஈடுபடும் நபர்களை சென்னை நகரில் நுழைய தடை விதிக்கும் வகையில், சென்னை நகர சட்டம் 51ஏ என்ற சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தன் படி குற்றவாளி ஒருவர் மீது நடவடிக்கை எடுத்தால், சம்பந்தப்பட்ட குற்றவாளி சென்னைக்குள் ஓராண்டு காலத்திற்கு நுழைய முடியாது. அப்படி நுழைந்தால் எந்த வாரன்டும் இன்றி சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்து ஓராண்டு சிறையில் அடைக்க முடியும். இப்படி ஓராண்டு சிறையில் அடைத்தால் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஜாமீனில் வெளியே வர முடியாது.
நாடு 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தும் தற்போது 78 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் ஆங்கிலேயர்கள் 1888ம் ஆண்டு உருவாக்கிய சென்னை நகர சட்டம் 51ஏன் 137 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை சென்னை காவல்துறையில் நடைமுறையில் உள்ளது. அதேநேரம் இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி) கடந்த ஆண்டு ஒன்றிய அரசு சில மாற்றங்கள் செய்து பிஎன்எஸ் மற்றும் பிஎன்எஸ்எஸ் என மாற்றியுள்ளது. ஆனால் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இயற்றப்பட்ட சென்னை நகர சட்டம் 51ஏ மாற்றப்படவில்லை. இந்தியாவிலேயே இந்த சட்டம் சென்னை காவல்துறையில் மட்டும் தான் உள்ளது.
சென்னை மாநகர காவல்துறையில் கமிஷனர்களாக இருந்த எந்த காவல்துறை அதிகாரிகளும் இந்த சட்டத்தை நாடு சுதந்திரம் அடைந்த பிறகு எந்த குற்றவாளிகள் மீதும் பயன்படுத்தியது இல்லை. தற்போது சென்னை பெருநகர காவல்துறை கமிஷனராக உள்ள அருண் ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட சென்னை நகர சட்டம் 51ஏவை முதல் முறையாக 3 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் எந்த காவல்துறை அதிகாரிகளும் துணிச்சலும் செய்யாத ஆங்கிலேயர் சட்டத்தை கூடுதல் டிஜிபியும் சென்னை கமிஷனரான அருண் எடுத்துள்ளது சட்ட வல்லுநர்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.
சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆதாய கொலை பழிவாங்கும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடிய ரவுடிகளை கண்டறிந்து அவர்கள் மேல் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் நுழைந்து பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடிய ரவுடிகளை கண்டறிந்து அவர்கள் மீண்டும் இதுபோன்ற கொடுஞ்செயல்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் துணை கமிஷனர்களால் பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் அச்சறுத்தல் தரக்கூடிய மற்றும் தங்களுக்கு எதிரான வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சாட்சிகளை மிரட்டக்கூடிய வரலாற்று பதிவேடு உடைய ரவுடிகளாக கண்டறியப்பட்டு பரிந்துரை செய்யப்பட்ட பி.லெனின், கு.நெடுங்குன்றம் சூர்யா, ஜெ.ராஜா(எ)ராக்கெட் ராஜா ஆகிய 3 ரவுடிகள் மீது நேற்று சென்னை நகர காவல் சட்டப்பிரிவு 51 ஏ-ன் படி வெறியேற்றுதல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட 3 ரவுடிகளில் பி.லெனின் மீது 6 ெகாலை, 12 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 28 குற்ற வழக்குகள் உள்ளது. அதேபோல் கு.நெடுங்குன்றம் சூர்யா மீது 5 கொலை, 12 கொலை முயற்சி வழக்கு உட்பட 64 குற்ற வழக்குகள் உள்ளது. அதேபோல், ஜெ.ராஜா(எ)ராக்கெட் ராஜா மீது 5 கொலை, 6 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 20க்கும் குற்ற வழக்குகள் உள்ளது. இதன் மூலமாக மேற்படி ரவுடிகள் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குள் நீதிமன்ற வழக்கு தொடர்பாகவோ அல்லது காவல்துறையினர் விசாரணை தொடர்பாகவோ இல்லாமல் வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும் நுழைவது இன்று(நேற்று) முதல் ஓராண்டு காலத்திற்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் மேற்படி ரவுடிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் முதல் முறையாக 3 ரவுடிகள் சென்னைக்குள் நுழைய ஓராண்டு தடை: கமிஷனர் அருண் அதிரடி appeared first on Dinakaran.