டெல்லி,
தலைநகர் டெல்லியின் மையப்பகுதியில் நாடாளுமன்றம் உள்ளது. நாடாளுமன்றத்தை சுற்றி 24 மணி நேரமும் பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, கடந்த 25ம் தேதி நாடாளுமன்ற கட்டிடம் அருகே வந்த இளைஞர் தான் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப்படையினர் கடுமையான தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், 95 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் இன்று அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதற்கட்ட விசாரணையில் தீக்குளித்து உயிரிழந்த இளைஞர் 26 வயது நிரம்பியவர் என்பதும் அவர் உத்தரபிரதேச மாநிலம் பஹ்பட் கிராமத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. குடும்ப தகராறு காரணமாக அவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.