நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக திருவண்ணாமலை தொகுதி திமுக எம்பிக்கு தேசிய விருது: 11 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திற்கு கிடைத்தது

3 hours ago 1

திருவண்ணாமலை: நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக தேசிய அளவிலான சன்சத் ரத்னா விருதுக்கு திருவண்ணாமலை தொகுதி திமுக எம்பி சி.என்.அண்ணாதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார். 11 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விருது தமிழ்நாட்டுக்கு கிடைத்து உள்ளது. சன்சத் ரத்னா விருது குழுவின் 15வது ஆண்டு விருதுகள் வழங்கும் விழா புதுடெல்லியில் வரும் ஜூலை மாத இறுதியில் நடைபெற உள்ளது.

அதையொட்டி, விருது பெறுவோரின் பட்டியலை, ஒன்றிய அமைச்சருக்கு நிகரான தகுதியும் அரசியல் சாசனத் தகுதியும் பெற்ற தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஸ்ரீஹன்ஸ்ராஜ் கங்காராம்அஹிர் தலைமைலான நடுவர் குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, தனிநபர் விருதுகள் 17 எம்பிக்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், நாடாளுமன்றத்தின் இரண்டு குழுக்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், சிறப்பு சன்சத் ரத்னா தேசிய விருதுகளைப் பெறும் 4 நபர்களின் பெயர்களையும் இக்குழு அறிவித்துள்ளது.

மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்களின் அதிகாரப்பூர்வ பதிவுகளிலிருந்தும், பிஆர்எஸ் சட்டமன்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்தும் பெறப்படும் ஆதாரங்களின் அடிப்படையிலும், நாடாளுமன்றத்தில் பங்கேற்ற விவாதங்களின் எண்ணிக்கை, அறிமுகப்படுத்தப்பட்ட தனியார் மசோதாக்கள் எண்ணிக்கை மற்றும் எழுப்பப்பட்ட கேள்விகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் சன்சத் ரத்னா விருதுக்குரிய நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதன்படி, திருவண்ணாமலை தொகுதி திமுக எம்பி சி.என்.அண்ணாதுரை சன்சத் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 11 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டுக்கு இந்த விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை தொகுதி எம்பி சி.என்.அண்ணாதுரை, கடந்த 2019ம் ஆண்டு முதன் முறையாக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, கடந்த 2024ம் ஆண்டு இரண்டாவது முறையாக திருவண்ணாமலை தொகுதியில் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 6 ஆண்டு காலத்தில், மக்களவையில் எழுப்பிய கேள்விகள், வருகைப் பதிவு, விவாதங்களில் பங்கேற்பு, தகவல் தொழில் நுட்பத் துறையை நவீன மயமாக்கல் தொடர்பாக இவர் கொண்டு வந்த தனிநபர் மசோதா விவாதத்துக்கு ஏற்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சன்சத் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எம்பி சி.என்.அண்ணாதுரை, திருவண்ணாமலையில் நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, தொடர்ந்து மக்கள் பணி சிறக்கவும், திமுகவின் குரலாக மக்களவையில் ஒலித்து தமிழகத்துக்கான உரிமைகளை பெற பாடுபட வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு வாழ்த்து தெரிவித்தார்.

The post நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக திருவண்ணாமலை தொகுதி திமுக எம்பிக்கு தேசிய விருது: 11 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திற்கு கிடைத்தது appeared first on Dinakaran.

Read Entire Article