
புதுடெல்லி,
'ராமாயணம்: தி லெஜண்ட் ஆப் பிரின்ஸ் ராமா' என்பது 1993-ம் ஆண்டு ஜப்பான்-இந்தியா இணைந்து தயாரித்த அனிமேஷன் திரைப்படமாகும். வால்மீகியின் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 450-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இந்திய -ஜப்பானியக் கலைஞர்கள் இணைந்து, 100,000 கையால் வரையப்பட்டன.
கீக் பிக்சர்ஸ் இந்தியா, ஏஏ பிலிம்ஸ் மற்றும் எக்செல் என்டர்டெயின்மென்ட் ஆகிய வெளியீட்டு நிறுவனங்கள் மூலம், இந்த அனிமேஷன் திரைப்படம் கடந்த ஜனவரி 24-ந்தேதி 4கே தரத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியான இந்த திரைப்படம், தற்போது இந்திய நாடாளுமன்றத்தில் ஒளிபரப்பாக உள்ளது.
இதன்படி, நாடாளுமன்றத்தில் வரும் 15-ந்தேதி 'ராமாயணம்' திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக பட வெளியீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ராமாயணம் படத்தின் சிறப்பு திரையிடல் காட்சியை சபாநாயகர் ஓம் பிர்லா உள்பட, நாடாளுமன்ற எம்.பி.க்கள் பலர் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.