நாடாளுமன்ற ஜனநாயகம் நாள்தோறும் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகிறது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

4 weeks ago 5

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற நடப்பு கூட்டத் தொடரில் அதானி மீதான குற்றச்சாட்டுகள், மணிப்பூர் கலவரம் ஆகியவை குறித்து விவாதிக்க மறுத்ததை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் நாள்தோறும் காலை 10 மணி முதல் 11 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் அணி திரண்டு ஊர்வலமாக நாடாளுமன்றத்திற்கு வருவது நடைமுறையாக இருந்தது. அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித்ஷா பேசியதால் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் உருவாகி வருவதை சகித்துக் கொள்ள முடியாத பாஜ எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளேயே இந்தியா கூட்டணி கட்சியினரையும், 80 வயது நிரம்பிய மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை தாக்க முற்பட்டதை தமிழக காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

பாஜ எம்பிக்கள், மல்லிகார்ஜுன கார்கேவை தாக்க முற்பட்டது குறித்து நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி சார்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உண்மை நிலை இப்படியிருக்க, பாஜவை சேர்ந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாக நாடகமாடி வருகிறார்கள். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயகம் நாள்தோறும் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்கள், கருத்து மோதல்கள் நடைபெறுவதற்கு பதிலாக மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி ஆகியோரை வன்முறை நோக்கத்துடன் தாக்க முற்பட்ட பாஜவினரை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நாடாளுமன்ற ஜனநாயகம் நாள்தோறும் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகிறது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article