
புதுடெல்லி,
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.பி.க்கள், மாதந்தோறும் ரூ.1 லட்சத்தை சம்பளமாக பெற்று வந்தனர். மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் தினப்படியாக ரூ.2,000-ம் பெற்று வந்தனர். இந்த சம்பளம் மற்றும் தினப்படியை மத்திய அரசு 24 சதவீதம் உயர்த்தி உள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- எம்.பி.க்கள் இனி மாதந்தோறும் சம்பளமாக ரூ.1.24 லட்சம் பெறுவார்கள். இதைப்போல அவர்களது தினப்படியும் ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. பதவியில் இருக்கும் எம்.பி.க்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டது போல, முன்னாள் உறுப்பினர்களின் ஓய்வூதியமும் உயர்த்தப்பட்டு உள்ளது.
முன்னாள் எம்.பி.க்களின் மாத ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.31 ஆயிரமாக அதிகரிக்கிறது. மேலும் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருந்த முன்னாள் எம்.பி.க்களுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கான கூடுதல் ஓய்வூதியமும் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வு 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படும்
1961-ம் ஆண்டு வருமான வரிச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செலவு பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.