நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தங்க தேரோட்ட திருவிழா கொடியேற்றம்: திரளானோர் பங்கேற்பு

1 day ago 2

களக்காடு, ஏப்.2: நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தங்க தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் அமைந்துள்ள வானமாமலை பெருமாள் கோயிலானது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், 8 சுயம்பு சேத்திரங்களில் முதன்மையானதாகவும் திகழ்கிறது. இங்கு சுவாமிக்கு தினமும் எண்ணெய் காப்பு நடப்பது தனிச்சிறப்பாகும். அத்துடன் ஜடாரியில் நம்மாழ்வார் எழுந்தருளி உள்ளதால் பூஜை நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் ஜடாரி ஆசீர்வாதம் இங்கு கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தங்க தேரோட்டத் திருவிழாவும், சித்திரை மாதம் பெரியமர தேரோட்ட விழாவும் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான தங்க தேரோட்டத் திருவிழா முதல் நாளான நேற்று (1ம்தேதி) செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி வானமாமலை பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார். அதன் பின்னர் கோயில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது.

முன்னதாக கொடி பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு, மாடவீதிகளில் திருவீதி உலாவாக கொண்டு செல்லப்பட்டது. கொடி ஏற்றப்பட்டதும் கொடி மரத்திற்கும் பெருமாளுக்கும் மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பெருமாள் தினசரி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி இடம்பெறுகிறது. 5ம் திருநாளான வருகிற 5ம் தேதி பெருமாள் கருட வாகனத்திலும், தாயார் ஷேஷ வாகனத்திலும்  ஆண்டாள் அன்னவாக னத்திலும் திருவீதி உலா வருகின்றனர்.

7ம் திருநாளான வருகிற 7ம் தேதி (திங்கள்) மாலையில் தங்க புண்ணியகோடி விமான வாகனத்திலும், கண்ணாடி சப்பரத்திலும் பெருமாள் எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க தேரோட்டம் 10ம் திருநாளான ஏப். 10ம் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று பகல் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். அதனைதொடர்ந்து தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. வானமாமலை ஜீயர் வடம் பிடித்து விழாவை துவக்கிவைக்கிறார்.

The post நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தங்க தேரோட்ட திருவிழா கொடியேற்றம்: திரளானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article