
நெல்லை,
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சின்னத்துரை. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்தபோது சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு தாக்குதலுக்கு ஆளான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. தற்போது கல்லூரியில் வரும் அவர், மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலி மூலம் அறிமுகமான நபர் ஒருவர், தங்களுக்கு திருமண அழைப்பிதழ் தரவேண்டும் என கூறி சின்னத்துரையை தனி இடத்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
அதனை நம்பிச் சென்ற அவரை, 4 பேர் கொண்ட கும்பல் பணம் கேட்டுத் தாக்கியதாகவும் பணம் இல்லாத நிலையில், செல்போனை பறித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த சின்னத்துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். கல்லூரி மாணவர் சின்னத்துரை மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர் சின்னத்துரை மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணைக்காக காவல்துறை இரண்டு தனிப்படைகளை அமைத்துள்ளது.
இந்தநிலையில், நாங்குநேரி மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து நெல்லை காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில்,
சின்னத்துரை, வயது 18, த.பெ. முனியாண்டி என்பவர் திருமால் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தனது தாய் மற்றும் தங்கையுடன் குடியிருந்து வருகிறார். இவர் அங்குள்ள கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு வணிகவியல் நிறுவன செயலாளர் (B.Com. Corporate Secretaryship) துறையில் படித்து வருகிறார். நேற்று மாலை சுமார் 6.15 மணியளவில் தனது நண்பரை பார்க்க பாளையங்கோட்டை செல்வதாக தாயார் அம்பிகாவிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
சுமார் 07:30 மணியளவில் இனம் தெரியாத நபரின் அலைப்பேசி மூலம் தனது தாயாரை தொடர்பு கொண்டு மாவட்ட அறிவியல் மையம் அருகிலுள்ள பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன்னை தாக்கியதாக தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் தகவல் தெரிந்த காவல்துறையினர் சம்பவ இடம் சென்று வலது கையில் சிறிய காயத்துடன் இருந்த சின்னதுரையை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சின்னதுரையிடம் இன்ஸ்டாகிராம் நண்பரின் அழைப்பின் பேரில் கொக்கிரகுளம் விசாரித்த பொழுது அருகிலுள்ள வசந்தம் நகர் விரிவாக்கப்பகுதிக்கு சென்றதாகவும் பின்னர் அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் சின்னதுரையிடம் பணம் கேட்டதாகவும் அவரிடம் பணம் இல்லாததால் அவரை கட்டையால் அடித்து வலதுகையில் காயம் ஏற்படுத்தி அவரிடமிருந்த அலைப்பேசியை பறித்து சென்றதாகவும் தெரிவித்தார்.
மேற்படி சின்னதுரையிடம் காவல்துறையினர் விசாரணைக்காக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் கேட்ட பொழுது தனக்கு மறந்து விட்டதாக கூறினார். மேலும் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கினை மீட்டெடுப்பதற்காக அவரது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை கேட்ட பொழுது அதுவும் தனக்கு மறந்து விட்டதாக கூறுகிறார். சின்னதுரையின் கையில் ஏற்பட்ட சிறிய காயத்திற்கு சிகிச்சை முடித்து தனது சொந்த விருப்பத்தின் பேரில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். மேற்படி சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.