நாங்குநேரி அருகே நான்கு வழிச்சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதல்: குழந்தை உள்பட 7 பேர் பலி: 7 பேர் படுகாயம்

6 hours ago 2

ஏர்வாடி: நாங்குநேரி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட 7 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகேயுள்ள கன்னங்குளம் மேட்டுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். கட்டிடத் தொழிலாளி. இவர் தனது நண்பரின் காரில் அவரது மனைவி அன்பரசி, இவர்களது மகன்கள் பிரவீன், அஸ்வின், உறவினர்கள் அட்சயாதேவி, மெல்கிஸ், தாணுமூர்த்தி, அவரது மனைவி பாலகிருஷ்ணவேனி, அவரது மகள் பிரியதர்ஷினி, சுபி சந்தோஷ் உள்பட 10 பேருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று விட்டு நேற்று மாலை ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

இதுபோல் பாளை அடுத்த டக்கரம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த தனிஷ்லாஸ் (65), அவரது மனைவி மார்க்ரெட் மேரி, மருமகள் ஜோபட், ஜோகன், ஜோபினா, ஜோஹானா, அமுதா உள்பட 7 பேர் ஒரு காரில் நாகர்கோவிலில் இருந்து டக்கரம்மாள்புரத்துக்கு வந்து ெகாண்டிருந்தனர்.நாங்குநேரி அருகே தளபதிசமுத்திரம் கீழூர் நான்கு வழிச்சாலையில் மாலை சுமார் 4.30 மணி அளவில் வரும் போது மாரியப்பன் ஓட்டிச் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை தாண்டி மறுபக்கம் ெசன்று தனிஷ்லாஸ் ஓட்டி வந்த காருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் இரு கார்களின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது. இதில் இரு கார்களின் இடிபாடுகளுக்குள் சிக்கி தனிஷ்லாஸ் காரில் வந்த அவரது மனைவி மார்க்ரெட் மேரி, பேரன் ஜோகன், மருமகள் ஜோபர்ட், உறவினர் அமுதா ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயத்துடன் இரு கார்களின் இடிபாடுகளில் சிக்கி தவித்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மெல்கிஸ் (55), தனிஸ்லாஸ் மற்றும் 9 வயது பெண் குழந்தை, 7 வயது பெண் குழந்தை ஆகியோர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் மெல்கிஸ் இறந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தனுஸ்லாஸ் மற்றும் 9 வயது பெண் குழந்தையும் இறந்தனர். 7 வயது பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயமடைந்த தாணுமூர்த்தி மனைவி பாலகிருஷ்ண வேணி, மகள்கள் பிரியதர்ஷினி, அட்சயாதேவி, மகன் சுபி சுந்தோஷ், மாரியப்பன் மனைவி அன்பரசி, மகன்கள் பிரவீன், அஸ்வின் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்த நெல்லை கலெக்டர் சுகுமார், கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா எஸ்.பி. ஸ்டாலின் நாகர்கோவில் ஏ.எஸ்.பி லலித்குமார் ஆகியோர் நெல்லை, ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விபத்து குறித்து விசாரித்து சிகிச்சை பெற்றுபவர்களிடம் நலம் விசாரித்தனர்.

The post நாங்குநேரி அருகே நான்கு வழிச்சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதல்: குழந்தை உள்பட 7 பேர் பலி: 7 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article