
சென்னை,
நாங்கள் திரைப்படத்தினை, 'கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ்' நிறுவனம் சார்பில், ஜிவிஎஸ் ராஜு தயாரித்துள்ளார். இயக்குனர் அவினாஷ் பிரகாஷ் எழுதி இயக்கியிருப்பதோடு, ஒளிப்பதிவினையும் மேற்கொண்டுள்ளார். இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளது. வேத் ஷங்கர் சுகவனம் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், இயக்குனர் அவினாஷ் பிரகாஷ் இயக்கிய 'நாங்கள்' திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
ஊட்டியில் தனியார் பள்ளி நடத்தி வருபவரான அப்துல் ரபே, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்கிறார். தனது மூன்று ஆண் குழந்தைகளையும் மிகவும் கண்டிப்பாக வளர்க்கிறார். சிறிய தவறு நடந்தாலும் கடுமையான தண்டனைகளை கொடுக்கிறார். தந்தையின் மிரட்டலுக்கு பயந்து வேலையாட்கள் போல நடந்து கொள்ளும் குழந்தைகள், ஒருகட்டத்தில் வெகுண்டு எழுகிறார்கள். கேரளாவில் உள்ள தாய் பிரார்த்தனாவிடம் செல்கிறார்கள்.
ஆனால் தாயின் கஷ்டத்தை உணர்ந்து மீண்டும் தந்தையிடம் திரும்புகிறார்கள். மகன்களின் எதிர்காலத்துக்காக சில முடிவுகளை தைரியமாக அப்துல் ரபே எடுக்கும்போது பிரார்த்தனா வந்து சேருகிறார். அப்துல் ரபே தனது மனைவியை ஏற்றுக்கொண்டாரா? குழந்தைகளுக்காக அவர் எடுக்கும் முடிவுகள் என்ன? என்பதே மீதி கதை.
கண்டிப்பான தந்தையாக படம் முழுக்க அராஜகமான நடிப்பை வழங்கியுள்ளார், அப்துல் ரபே. குழந்தைகளை அடிக்கும் காட்சிகளில் அவரது சைக்கோதனமான நடிப்பு குரூரம். அழுகையும், ஏமாற்றமுமாக பிரார்த்தனா இயல்பான நடிப்பால் கவருகிறார். அப்துல் ரபேவின் மகன்களாக மிதுன், ரித்திக், நிதின் ஆகியோரின் அப்பாவித்தனமான நடிப்பு ஆச்சரியம் தருகிறது. அப்பாவிடம் அடிவாங்கி வந்த அவர்கள், ஒருகட்டத்தில் திமிறி எழுவது திருப்பம். சோகமான காட்சிகளை மட்டும் கருப்பு-வெள்ளையில் காட்டி அவினாஷ் பிரகாஷ் ஒளிப்பதிவில் புதுமை செய்துள்ளார். வேத் சங்கரின் இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது.
எதார்த்தமான நடிப்பு படத்துக்கு பலம். நாடகத்தனமான காட்சிகள் பலவீனம். மனைவியை பிரிந்து வாழும் ஒரு கண்டிப்பான தந்தையிடம் வளரும் குழந்தைகள் வாழ்க்கையை எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள்? என்பதை உணர்ச்சிகளின் அடிப்படையில் திரைக்கதையாக வடிவமைத்து கவனிக்க வைத்துள்ளார், இயக்குனர் அவினாஷ் பிரகாஷ்.