
முல்லன்பூர்,
ஐ.பி.எல் தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 219 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அதிரடியாக ஆடிய பிரியன்ஷ் ஆர்யா 43 பந்தில் 103 ரன்கள் எடுத்தார்.
சென்னை தரப்பில் கலீல் அகமது, அஸ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 220 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 18 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக டெவான் கான்வே 69 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில் கூறியதாவது, எந்த கிரிக்கெட் மைதானத்தில் விளையாடினாலும் இது தான் எங்களுடைய டெம்ப்ளேட்டாக இருக்கும். எங்களிடம் வலுவான ஹிட்டர்கள் இருக்கிறார்கள். பிரியன்ஷ் விளையாடியதை பார்த்தது அபாரமாக இருந்தது.
கடந்தப் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சரை எதிர்கொண்ட போது முடிவு எடுப்பதில் கொஞ்சம் தடுமாறிய அவரிடம் நான் பேசினேன். அதை வைத்து இன்று தனது உள்ளுணர்வுகளை பின்பற்றி சுதந்திரமாக விளையாடிய அவரைப் போன்ற மனநிலையை எங்கள் வீரர்கள் அனைவரும் கொண்டிருக்க விரும்புகிறேன். அது ஐ.பி.எல் தொடரில் விளையாடப்பட்ட டாப் இன்னிங்ஸ்.
துபே, கான்வே ஆகியோர் தொடர்ச்சியாக விளையாடியதால் சாஹலை நிறுத்தி வைத்திருந்தோம். ஒருவேளை அவர் பவுலிங் செய்தால் துபே எவ்வளவு அதிரடியாக அடிப்பார் என்பது உங்களுக்குத் தெரியும். சாஹலை கொஞ்சம் தாமதப்படுத்தியது எங்களுக்கு வேலை செய்தது. கேட்ச்கள் தவற விட்டது பற்றி நாங்கள் பேசி வருகிறோம்.
எங்களுடைய சிறந்த ஆட்டத்தை இன்னும் நாங்கள் ஆரம்பிக்கவே இல்லை. இது தொடரின் தொடக்கம் என்பதால் கொஞ்சம் பதற்றம் இருக்கிறது. அதை விட்டுவிட்டு பயமின்றி நாங்கள் விளையாட வேண்டும். அதையும் தாண்டி இந்தப் போட்டியை வென்றது முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.