நாகர்கோவில் பூங்காவில் ரூ.3.49 கோடியில் கோளரங்க கட்டுமான பணிகள் தீவிரம்

1 week ago 6

*அறிவியல் உபகரணங்கள் – 40 இருக்கைகளுடன் 8 மீ. விட்டம் கொண்ட திரை அமைகிறது

நாகர்கோவில்: நாகர்கோவில் பூங்காவில் நடந்து வரும் கோளரங்க கட்டுமான பணிகளை, 3 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான சர்.சி.பி. ராமசாமி ஐயர் நினைவு பூங்கா திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் தொடர்புடைய பாரம்பரியம் மிக்க பூங்காவாகும். இந்த பூங்காவில், நூலகம், மிக் ரக போர் விமானம், கலைவாணரால் நிறுவப்பட்ட காந்தி நினைவு ஸ்தூபி, செல்பி பாயின்ட் உள்ளிட்டவை உள்ளன.

நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையம் அருகில் இருப்பதுடன், நகரின் மைய பகுதியில் உள்ளதால் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள் வந்து செல்கிறார்கள். குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களும், திண்பண்டங்கள் விற்பனை கடையும் செயல்படுகிறது.

இந்நிலையில், இங்கு நவீன கருவிகளுடன் கூடிய அறிவியல் அரங்குகள் கொண்ட அறிவியல் பூங்கா அமைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. இதன்படி, கோளரங்கம், நியூட்டனின் 3ம் விதி உள்ளிட்டவற்றை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அறிவியல் அரங்கம், ரூ.3.49 கோடியில் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான கட்டுமான பணிகள் கடந்த மாதம் தொடங்கின. மாநகராட்சி மேயர் மகேஷ், இந்த கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். 3 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு, கட்டுமான பணிகள் நடக்கின்றன.

இங்கு அமைக்கப்படும் நவீன டிஜிட்டல் கோளரங்கம் 8 மீட்டர் விட்டம் கொண்ட கோள வடிவ திரையுடன் அமைகிறது. 4 கே தரத்தில் அறிவியல் மற்றும் வானவியல் தொடர்பான ஒலி, ஒளி காட்சி ஒளிபரப்பு செய்யப்படும். இதை பார்ப்பதற்காக 40 இருக்கைகளுடன் ஏ.சி. வசதியுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படுகிறது.

மேலும் அறிவியல் தொழில் நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய நுட்பங்களை செய்முறை மூலம் கற்றுக் கொள்ளும் வகையில் அறிவியல் சாதனங்கள் அமைக்கப்படுகின்றன. தமிழ், ஆங்கில லேப் நிறுவப்பட உள்ளது. அறிவியல் மையம் அமைந்தால், கற்றல் மையமாக பூங்கா மாறும். இதற்கான உபகரணங்களும் வந்துள்ளன.

கற்றல் மையமாகவும் மாற உள்ளது

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் இங்கு அறிவியல் மையம் இல்லை. இந்த மாவட்டத்தை சுற்றி காவல்கிணறு மற்றும் திருவனந்தபுரத்தில் ஐஎஸ்ஆர்ஓ மையம் உள்ளது. ஐஎஸ்ஆர்ஓ தலைவர்களாக குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். தற்போது ஐஎஸ்ஆர்ஓ தலைவர் நாராயணன், குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் தான்.

இந்த மாவட்டத்தை சேர்ந்த பலர் விஞ்ஞானிகளாக உள்ளனர். ஆனால் இங்கு அறிவியல் மையம் இல்லை.இது தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக மேயர் மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் முயற்சியின் பேரில், கோளரங்கம் அமைக்கப்படுகிறது.

அறிவியல் மையத்தின் முன்னோடியாக இது செயல்படும். பூங்கா வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமில்லாமல், இங்கு வரும் மாணவர்கள், இளைஞர்களின் அறிவு திறனை அதிகரிக்கும் கற்றல் மையமாகவும் மாற உள்ளது என்றனர்.

The post நாகர்கோவில் பூங்காவில் ரூ.3.49 கோடியில் கோளரங்க கட்டுமான பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article