நாகர்கோவில்: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 2 புதிய நடை மேடைகளுக்கான தரை தளம், மேற்கூரை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம், அதிக வருவாய் பெற்று ெகாடுக்கும் ரயில் நிலையங்களில் முக்கியமான ரயில் நிலையமாகும். ஆண்டுக்கு சுமார் ரூ.70 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. நாகர்கோவில், கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்படும் ரயில்களுக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் வைத்து பிட்லைன் முதல் நிலை பராமரிப்பு, பிட் லைன் இரண்டாம் நிலை பராமரிப்பு, ரயில் பெட்டிகள் பழுதுபார்த்தல், ரயில்களை சுத்தம் செய்து தண்ணீர் பிடித்தல் என பல்வேறு கட்ட பணிகள் நடைபெறுகிறது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்தி வைக்கவும், பராமரிப்பு செய்யவும் கூடுதல் வசதிகள் வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்த ரயில் நிலையத்தில் தற்போது 1, 1 ஏ, 2, 3 ஆகிய 4 பிளாட்பாரங்கள் உள்ளன. 4 வது மற்றும் 5 வது பிளாட்பாரங்கள் அமைக்கும் பணி கடந்த வருடம் தொடங்கியது. இந்த புதிய பிளாட்பாரங்கள் 625 மீட்டர், அதாவது 26 பெட்டிகள் கொண்ட ரயில்கள் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஸ்டேபளிங் லைன்கள் அகற்றப்பட்டு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய பிளாட்பாரத்துக்கான தண்டவாளங்கள் அமைக்கும் பணி முடிவடைந்தன. அடுத்த கட்டமாக பிளாட்பாரம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. மேற்கூரை அமைப்பதற்கான பணிகள், குடிநீர் தொட்டிகள் அமைப்பு, தரை தளம் அமைத்தல், அலங்கார கற்கள் பதித்தல் பணிகள் நடக்கின்றன. முதற்கட்டமாக மேற்கூரைக்கான இரும்பு தூண்களை நிலை நிறுத்தும் பணிகள் மற்றும் உயரழுத்த மின் பாதைகளுக்கான கம்பங்கள் அமைத்தல் பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் நிர்வாக காரணங்களால் பணிகள் தள்ளி போனது. தற்போது ஏப்ரல் இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் பிளாட்பாரங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்தால், ரயில்களை உள் வாங்குவதில் பிரச்னை இருக்காது என அதிகாரிகள் கூறி உள்ளனர். இதே போல் கூடுதலாக 3 பிட் லைன்கள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளன. இதன் மூலம் ரயில்களை பராமரிப்பு செய்ய கூடுதல் வசதி உள்ளது. ரயில்களை சுத்தம் செய்வதற்காக தண்ணீரை பெறும் வகையில் புதிதாக நீர் தேக்க தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. கூடுதல் பிளாட்பாரங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததும், அடுத்த கட்டமாக ரயில்வே பணிமனை மேம்பாட்டு பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.
புதுப்பிப்பு பணிகளும் தீவிரம்
கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் வகையில் அம்ரித் பாரத் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தது. இதில் குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையமும் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. ரூ.25.78 கோடியில் முதற்கட்டமாக மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த மறுசீரமைப்பு பணியில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் புதிய வடிவமைப்புடன் நவீனப்படுத்தப்பட உள்ளது. அலங்கார வளைவுகள், நவீன பார்க்கிங் வசதிகள், இயற்கை புல்வெளியுடன் அலங்கார தோட்டத்துடன் கூடிய ரவுண்டானா, செல்பி பாயிண்ட், பஸ் நிறுத்தங்கள், கூடுதல் எஸ்கலேட்டர்கள், லிப்ட் வசதிகள், பயணிகள் தங்கும் அறைகள், ரயில் நிலையத்தில் ஓய்வு அறைகள், தபால் நிலையம், காவல் நிலைய கட்டிங்கள், ஸ்டேஷன் மாஸ்டர் அறைகள், கேண்டீன்கள் புதுப்பிப்பு உள்ளிட்ட மொத்தம் 14 பணிகள் நடந்து வருகின்றன.
இதில் 1வது பிளாட்பார மேற்கூரைகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. அலங்கார வளைவு அமைக்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. ஸ்டேஷன் மாஸ்டர் அறை புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இது போன்ற ஒரு சில பணிகள் மட்டும் முடிவடைந்துள்ன.
The post நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 2 புதிய நடைமேடைகளுக்கான தரைத்தளம், மேற்கூரை பணிகள் தீவிரம்: ஏப்ரல் இறுதிக்குள் முடிக்க திட்டம் appeared first on Dinakaran.