நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய பைபாஸில் 2 புதிய பிளாட்பாரங்கள் வருமா?.. அதிக ரயில்களை இயக்க வாய்ப்பாக அமையும்

4 weeks ago 6

நாகர்கோவில்: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய பைபாசில், 2 புதிய பிளாட்பாரங்கள் அமைந்தால், டவுன் ரயில் நிலையம் வழியாக இன்னும் கூடுதல் ரயில்களை இயக்கலாம். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலும் இட நெருக்கடி குறையும் என்று பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர். திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் முக்கிய ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தில் தற்போது இட நெருக்கடியை குறைக்கும் வகையில், முக்கிய ரயில்கள் டவுன் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகின்றன. நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள் கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல பெரும் சிரமத்தை சந்திக்கிறார்கள். டவுன் ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் பயணிப்பதாக இருந்தால் அதிக கட்டணம் கொடுக்க வேண்டிய உள்ளது.

மிக முக்கிய ரயில்களான சென்னை – கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி ரயில், திருநெல்வேலியில் இருந்து ஹப்பா மற்றும் பிலாஸ்பூர் செல்லும் வாராந்திர ரயில்கள், மதுரை – புனலூர் போன்ற எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் சந்திப்பு ரயில் நிலையம் வழியாக செல்லாமல் டவுன் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. வருங்காலங்களில் மேலும் பல எக்ஸ்பிரஸ் ரயில்களும் டவுன் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் நாகர்கோவில் சந்திப்பு – திருவனந்தபுரம் வழித்தடம் பிரியும், நாகர்கோவில் பைபாசில் புதிய பிளாட்பாரங்கள் அமைத்து, ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம், பைபாஸ் பிளாட்பாரத்தில் இறங்கி சிறிது தூரம் நடந்து, நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்குள் வந்து விட முடியும் என்பதால் பைபாசில் பிளாட்பாரம் அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

ஏற்கனவே பைபாசில் 2 புதிய பிளாட்பாரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, பின்னர் கிடப்பில் போடப்பட்டது. எனவே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தற்போது மீண்டும் கோரிக்கை எழுந்துள்ளது. வரும் ஜனவரி 1ம் தேதி புதிய ரயில்வே பட்டியல், திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளது. இதில் குமரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரயில்கள் அறிவிக்கப்படுமா? திட்டங்கள் வருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய பைபாசில் புதிதாக 2 பிளாட்பாரங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவி சாய்க்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தற்போது 1, 1 ஏ, 2, 3 ஆகிய 4 பிளாட்பாரங்கள் உள்ளன. தற்போது 4, 5 வது பிளாட்பாரங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

4, 5 பிளாட்பாரங்கள் அமைந்தால், சந்திப்பு ரயில் நிலையத்தில் பிளாட்பாரங்கள் எண்ணிக்கை 6 ஆக உயரும். இதனால் ரயில்களை உள் வாங்குவதில் பிரச்சினை இருக்காது. இதே போல் நாகர்கோவில் – திருவனந்தபுரம் ரயில் பாதை பிரியும் பைபாசில் புதிதாக 2 பிளாட்பாரங்கள் அமைந்தால், டவுன் ரயில் நிலையம் வழியாக செல்லும் வகையில் இன்னும் கூடுதல் ரயில்களை இயக்க முடியும். இதனால் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பெரும் அளவில் இட நெருக்கடி குறைந்து, அதிக ரயில்களை நிறுத்தி இயக்க வாய்ப்பாக அமையும். எனவே நாகர்கோவில் சந்திப்பு பைபாசில் புதிதாக 2 பிளாட்பாரங்கள் அமைக்கும் திட்டத்துக்கு உயிர் கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

ரயில் பயணிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்
ஏற்கனவே கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மேற்படி பைபாசில் பிளாட்பாரம் அமைக்க திட்டமிடப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளார். இந்த நிலையில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தியும் இந்த இடத்தை பார்வையிட்டார். பைபாசில் பிளாட்பாரம் அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக ரயில்வே துறைக்கு கடிதம் எழுத உள்ளதாக அவர் உறுதி அளித்தார். அவருடன் வக்கீல் அருணன், குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் ராம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

இது தொடர்பாக ராம் கூறுகையில், பைபாசில் 2 பிளாட்பாரங்கள் அமைவதன் மூலம் சந்திப்பு ரயில் நிலையம் வரும் சுற்றுலா, ரயில் பயணிகள் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து நடந்தே தற்போது சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள 1 ஏ பிளாட்பாரத்துக்கு வந்து விட முடியும். திருவனந்தபுரம் கோட்டம் மற்றும் தென்னக ரயில்வேக்கு உட்பட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் பைபாசில் பிளாட்பாரங்கள் உள்ளன. அதன்படி நாகர்கோவில் சந்திப்பு பைபாசிலும் 2 புதிய பிளாட்பாரம் அமைக்க திட்டமிட்டு ஆய்வு செய்து, நிதி ஒதுக்கீடு செய்தார்கள். ஆனால் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பயணிகளுக்கு மிகவும் பலன் உள்ளதாக இருக்கும் என்றார்.

The post நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய பைபாஸில் 2 புதிய பிளாட்பாரங்கள் வருமா?.. அதிக ரயில்களை இயக்க வாய்ப்பாக அமையும் appeared first on Dinakaran.

Read Entire Article