நாகப்பட்டினம், பிப்.11: நாகப்பட்டினம் காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசின் இந்து சமய அறநிலை துறை சார்பில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாகப்பட்டினம் காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3ம்தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையும், 4ம் தேதி கணபதி ஹோமம், 5ம் தேதி நவகிரக ஹோமம், வாஸ்து ஹோமம், 6ம் தேதி காலை தீர்த்தம் எடுத்து வருதல், இரவு முதல் கால யாகசாலை பூஜையும், 7ம் தேதி காலை மருந்து சாத்துதல், 2ம் கால யாகசாலை பூஜையும், இரவு 3ம் கால யாக சாலை பூஜையும், 8ம் தேதி காலை 4ம் கால யாகசாலை பூஜையும், இரவு 5ம் காலயாக சாலை பூஜையும் நடைபெற்றது.
9ம் தேதி காலை 6ம் கால யாகசாலை பூஜையும், மாலை தம்பதி பூஜை, கன்னியா பூஜை, பிரம்மச்சாரி பூஜை, லட்சுமி பூஜை நடைபெற்று, 7ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்து நேற்று காலை கோ பூஜை நடைபெற்று 8ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று சௌரிராஜ பெருமாள் கோயிலில் இருந்து சீர்வரிசை எடுத்து எடுத்து வருதல் நடைபெற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பஞ்சமூர்த்தி வீதி உலா காட்சி நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், நாகை நகரவாசிகள், நம்பியா நகர், ஆரிநாட்டுத் தெரு பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர்.
இக்கோயிலில், காயாரோகணேஸ்வரர் என்ற பெயரை தாங்கி கோயில் இறைவன் அருள்பாலிக்கிறார். காசி விசாலாட்சி, நாகை நீலாயதாட்சி, ஆரூர் கமலாயதாட்சி, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி என்ற வகையிலே ஐந்து ஆட்சி பீடங்களில் ஒன்றாக விளங்குகிறது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான அழுகணி சித்தர் பூஜித்து, அம்பிகையின் தரிசனம் கிடைக்க பெற்று ஜீவ சமாதி அடைந்த தலமாகவும் விளங்குகிறது. சித்தருக்கு காட்சி கொடுத்து முக்தியும் அருளிய அம்பிகையாக நீலாயதாட்சி இங்கே அருள் பாலிக்கிறார்.
The post நாகப்பட்டினம் காயாரோகண சுவாமி, நீலாயதாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.