குடும்ப வாழ்க்கை மேற்கொண்ட ஒருவர் அவ்வூரை சேர்ந்த ஒரு ஞானியிடம் வந்தார். தன் வாழ்வில் இன்பமும் துன்பமும் இசிஜி ரிப்போர்ட் போல ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதை சுட்டிக் காட்டி, இத்தகைய தருணங்களால் எனது மனது மிகவும் சோர்வடைவதுடன் உணர்ச்சிகளும் தடம் பிறழ்கிறது. எனவே தாங்கள் தயவாய் ஞானத்தை ஈந்துஉதவிட வேண்டுமென ஞானியிடம் கேட்டான். வாய்மொழி ஆலோசனைகளால் ஞானத்தை இந்த குடும்பஸ்தருக்கு அறிய வைக்க முடியாது என உணர்ந்த ஞான அவரிடம், ‘‘நாளையதினம் உன் வீட்டின் கழுதையின் மீது பொதிகளை காலையில் ஏற்றி வரும்போதும் மாலையில் திரும்புபோதும் கழுதையை உற்று கவனி, பின்பு என்னிடம் வா’’ எனக் கூறினார். மறுதினம் பொழுது விடிந்ததும், குடும்பஸ்தர் திண்ணையில் அமர்ந்து, அவ்வழியாய் சலவை தொழிலாளி அழுக்கு பொதிகளை கழுதை மேல் ஏற்றி வந்ததையும், மீண்டும் மாலையில் சலவை செய்த துணிகளை ஏற்றிச் சென்றதையும் உற்றுக்கவனித்துவிட்டு, மறுநாள் ஞானியிடம் சென்றான், நீங்கள் சொன்னது போல் கலையிலும் மாலையிலும் கழுதைகள் சென்றதையும் திரும்பியதையும் கவனித்தேன், ஆனால் அதில் ஞானம் தொடர்பான செய்தி இருப்பதுபோல் தெரியவில்லை எனக் கூறினான்.
அன்பான குடும்பஸ்தரே! காலையில் கழுதைகள் அழுக்கு துணிகளை சுமந்து சென்றன. அப்போது ‘‘அழுக்கு துணிகளை சுமக்கிறோம் என்ற வருந்தம் இல்லை.’’ அதே போல் மாலையில் சலவை செய்த துணியை சுமக்கிறோம் என்ற மகிழ்ச்சியும் திரும்பி வரும்போது மிதமிஞ்சிய சந்தோஷம் இல்லாமலும், இன்பம் துன்பம் இரண்டையும் நடுநிலையான மனதுடன் ஏற்றுக் கொள்ள பழகிகொள்ள வேண்டும். பகுத்தறிவு இல்லாத கழுதை தன் உணர்வை நிலையாக வைத்திருக்கும் போது, ஆறு அறிவு பெற்ற நாம் எங்ஙனம் நடந்துகொள்ள வேண்டும்? எனக்கூறி ஆலோசனை வழங்கினார்.
இறைமக்களே, ‘‘வசதி வந்தால் ஆடாதே, வறுமை வந்தால் வாடாதே’’ என்பது பொதுமொழி. வசதி வாய்ப்புகள் இருக்கின்ற போது தலை, கால் புரியாமல் ஆடுவதும், வறுமை காலங்களில் துவண்டு போய் தலைநிமிர சக்தியற்று காணப்படுவது சமூகத்தில் தினசரி காட்சியாக காணப்படுகிறது.
சிலர் கொஞ்சம் வசதி அல்லது உயர் பதவி கிடைத்ததும் அவர்களை எல்லோரும் மதிக்க வேண்டும், மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைப்பர். தவறில்லை ஆனால், அதற்காக மற்றவர்களை அடிமைகளாக நினைக்கக் கூடாது. வேறுசிலர் தங்கள் வறுமை நிலை எண்ணி எண்ணி வருந்திக்கொண்டே இருப்பர். அதனால் எந்த லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. வறுமை உடலுக்கு தானே தவிர, உள்ளத்திற்கு அல்ல. வறுமை உடலில் இருக்கும் வரை எந்தவித பாதிப்பும் இல்லை. அதுவே உள்ளத்தில் வறுமை வந்துவிட்டால் பின்பு எந்த விதத்திலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட முடியாது. வசதியும் அதுபோலத்தான் உள்ளத்தில் சென்றுவிட்டால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இதற்கு வேதாகமத்தில் மிகச்சிறந்த உதாரணம் இளைய குமாரன் கதை. தன் தகப்பன் சம்பாதித்த பணத்தை பெற்றுக் கொண்டு தன் தகப்பன் சொல்லை அலட்சியம்பண்ணி மனப்போக்கில் செலவழித்து, இறுதியில் வறுமை அடைந்தான். வறுமை அடைந்தபோது பன்றிகளின் உணவை நாடும் அளவிற்கு வாடிப்போனான். நல்லசெய்தி என்னவெனில் அத்தகைய தருணத்தில் அவன் புத்திதெளிந்ததால் தன் தகப்பன் வீட்டிற்கு வந்து தன் ஜீவனை லாபப்படுத்திக்கொண்டான்.
இறைமக்களே, ‘‘நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்’’ (ரோமர் 12:2) என இறைவேதம் கூறுகிறது. எனவே இன்பமோ துன்பமோ, நன்மையோ தீமையோ, லாபமோ நஷ்டமோ, வெயிலோ மழையோ நாம் தேவசித்தம் உணர்ந்து நம் மனதை கையாள பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.
– அருள்முனைவர்: பெ.பெவிஸ்டன்.
The post நா(ந)ம் மனதைக் கையாளப் பழகுவோம்! appeared first on Dinakaran.