புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலத்தில் 5 முறை முதல்-மந்திரியாக இருந்தவர் நவீன் பட்நாயக். கடந்த சட்டசபை தேர்தலில் அவரது பிஜூ ஜனதாதளம் கட்சி தோல்வி அடைந்தது. தற்போது அவர் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். எதிர்க்கட்சி தலைவராக உள்ள நவீன் பட்நாயக்கிற்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு விவகாரங்களை கையாளும் உயர்மட்ட குழு நவீன் பட்நாயக்கின் பாதுகாப்பை குறைக்க பரிந்துரை செய்தது. இதனால் நவீன் பட்நாயக்கின் பாதுகாப்பு 'இசட்' பிரிவில் இருந்து 'ஒய்' பிரிவாக குறைக்கப்பட்டது.
இதனால் அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பெரும்பாலான போலீசார் திரும்ப பெறப்பட்டுள்ளனர். இனிமேல் நவீன் பட்நாயக்கிற்கு ஹவில்தார் தரத்தில் 2 போலீஸ்காரர்கள் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். நவீன் பட்நாயக்கின் பாதுகாப்பு குறைக்கப்பட்டதற்கு அவரது பிஜூ ஜனதாதளம் கட்சி எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.
இசட் பிரிவில் 22 வீரர்கள் 3 வேளை சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இந்த இசட் பிரிவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு அதி நவீன துப்பாக்கி மற்றும் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும்.
மேலும், ஒய், எக்ஸ், ஆகிய இரண்டு பாதுகாப்பு பிரிவுகளை காட்டிலும் இசட் மற்றும் இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் வீரர்கள் சர்வ வல்லமை படைத்தவர்களாக திகழ்வார்கள். ஆயுதங்களே இல்லாமல் கூட எதிரிகளை சமாளிக்கும் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள். காரணம் அந்தளவு அவர்களுக்கு புடம் போட்ட தங்கமாக கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும்.
'ஒய்' பிரிவு பாதுகாப்பு பிரிவில் 2 வீரர்கள் மட்டுமே இடம்பெறுவார்கள். அமைச்சர்கள் அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு இந்த பாதுகாப்பு தரப்படும். பாதுகாப்பு படைகளிலேயே மிகவும் கடைநிலையில் உள்ள பிரிவு இதுவாகும்.