
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் சாக்ஷாத்கார வைபவம் மூன்று நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை சுப்ரபாதத்தில் சாமி, தாயார்களை துயிலெழுப்பி தோமால சேவை, கொலு, பஞ்சாங்க சிரவணம், சகஸ்ர நாமார்ச்சனை நடந்தது.
காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை ஆலய முக மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வேங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை ஊஞ்சல் சேவை, மாலை 6 மணிக்கு உற்சவர் வாகன மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு மாலை 6.30 மணியளவில் உற்சவருக்கு லட்சுமி ஆரம் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்களை அணிவித்து அலங்காரம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இன்று காலை உற்சவ மூர்த்திகள் ஸ்ரீவாரிமெட்டு அருகே அமைந்துள்ள பார்வேடு மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பார்வேடு உற்சவம் நடைபெற்றது. அதையொட்டி ஆஸ்தானம், வைதீக காரியக்கர்மங்கள், கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிகளில் கோவில் துணை செயல் அதிகாரி வரலட்சுமி, உதவி செயல் அதிகாரி கோபிநாத் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.