சைலபுத்ரி: சைலம் என்றால் மலை என்று அர்த்தம். மலையரசன் மகளாகப் பிறந்தவள். தாட்சாயணி, பர்வதகுமாரி, பவானி என்று அழைக்கப்படுபவள். நவராத்திரியின் முதல் நாள் தேவியை தியானித்தால் மிகுந்த பலனைத் தரும்.
பிரம்மசாரிணி: பிரம்மமாக அதாவது, தவத்தின் வடிவாக திகழ்வதால் இவள் பிரம்மசாரிணி. இரண்டாம் நாள் தேவியின் சச்சிதானந்த சொரூபத்தை அடைய விரும்புகிறவர்கள் அன்னையை வணங்க மிகுந்த பலன் தருவாள்.
சந்திரகண்டா: முக்கண்ணனின் பத்தினியாக முக்கண்களுடன் காட்சியளிப்பவள். சந்திர காந்தக்கல் போல் ஈரமான நெஞ்சமுடையவள். வெப்பத்தைத் தான் பெற்று குளிர்ச்சியை பொழிவது சந்திரகாந்தக் கல். அதைப் போல் வினை எனும் வெப்பம் தணித்து பக்தர்களை தன் கருணை மழையில் நனையச் செய்பவள்.
கூஷ்மாண்டா: கூஷ்மம்-அண்டம் எனும் இரு வார்த்தைகளின் பொருளாகத் திகழ்பவள். அண்டம் எனும் பிரபஞ்சத்தினை உருவாக்குபவள். தான் இருக்கும் இடத்தில் உள்ள தீமையினை ஈர்த்து பிறரை பாதிக்காமல் காக்கிறாள். தேவியின் வயிற்றில் அமைந்துள்ள மூவித அக்னிகளால் அவள் கூஷ்மாண்டா எனப்படுகிறாள்.
ஸ்கந்தமாதா: ஸ்கந்தனின் தாய் என்பதால் ஸ்கந்தமாதா. அசுரர் குலம் அழிய கார்த்திகா எனும் வடிவெடுத்து கார்த்திகை பாலனாக கந்தன் பிறக்கக் காரணமானவள்.
காத்யாயனி: மகேஸ்வரி என் மகளாகப் பிறக்க வேண்டும் என்று மகாதேவனை வேண்டி மாதவம் புரிந்தார் காத்யாயன முனிவர். பூவுலகில் முனிவரின் புத்திரியாக பிறந்தாள் அம்பிகை. கன்னியர் மனம் மகிழும்படி கல்யாணப் பேறளிப்பவள் காத்யாயனி.
காலராத்ரி: மங்களகரமான காலத்தை உண்டாக்குபவள். சுபங்களை உண்டாக்குவதால் சுபகாரி என்ற பெயர் உண்டு. அச்சம் தரும் தோற்றத்தில் இருந்தாலும் அன்பு நிறைந்தவளான இவளை வழிபடுவோருக்கு எந்த சங்கடமும் தரமாட்டான் சனீஸ்வரன்.
மகாகெளரி: எட்டு வயதுச் சிறுமியாகப் புராணங்களில் கூறப்படும் அம்பிகையின் வடிவம். கெளரியாக வடிவெடுத்து அசுரர்களை அழித்தாள் தேவி. அதன் காரணமாக அவளது உடலில் சேறு, அசுரர்கள் சிந்திய உதிரம் அவளது ஆடையில் படிந்தன. தனது ஜடாமகுடத்திலிருந்த கங்கையால் அவளை பரிசுத்தப்படுத்தினார் பரமன். தேவியின் தேகம் முன்பை விட அதிக தேஜசுடன் பிரகாசித்தது. அந்த வடிவமே மகாகெளரி வடிவம்.
ஸித்திதாத்ரி: அனிமா, மகிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, பரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் எனும் எட்டு சித்திகளையும் அளிக்கவல்லவள் ஸித்திதாத்ரி. ஒன்பதாம் நாளன்று துர்க்கையை பூஜிப்பதால் சகல சித்திகளும் உண்டாகும்.
– ஆர்.ஜெயலெட்சுமி,
திருநெல்வேலி.
The post நவராத்திரி நாயகிகள் appeared first on Dinakaran.