உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே நேற்றிரவு சாலையை கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதியதில் தாய், குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டி மற்றும் பேச்சியம்மன்கோவில்பட்டியை சேர்ந்த குழந்தைகள் உட்பட 7 பேர் நேற்று உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்றனர். அங்கு வழிபாடு முடிந்துக்கொண்டு, மீண்டும் சொந்த ஊர் திரும்ப அரசு பஸ்சில் புறப்பட்டனர். இவர்கள் இரவு 8 மணியளவில் குஞ்சாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக தேனியில் இருந்து உசிலம்பட்டி நோக்கி அதிவேகமாக சென்ற கார், அவர்கள் மீது மோதியது.
இதில், குஞ்சாம்பட்டியை சேர்ந்த ஜெயமணி (42), அவரது மனைவி ஜோதிகா (25), மகன் பிரகலாதன் (3), மகள் கவியாழினி (1), தாய் லட்சுமி (55), கருப்பாயி (60), பேச்சியம்மன்கோவில்பட்டியை சேர்ந்த பாண்டிச்செல்வி (42) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் 7 பேரையும் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில், ஜோதிகா, அவரது மகன் பிரகலாதன், லட்சுமி மற்றும் பாண்டிச்செல்வி ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து படுகாயமடைந்த ஜெயமணி, கருப்பாயி மற்றும் குழந்தை கவியாழினி ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மூவரும் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்ற கார் டிரைவர் ஆனந்தகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.
The post உசிலம்பட்டி அருகே கார் மோதி 4 பேர் பலி: 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.