நவராத்திரி கொலுவின் மகிமை!

1 month ago 13

நவராத்திரி விரதம் என்பது சக்தி தேவியை வணங்கி கடைபிடிக்கப்படும் விரதங்களில் ஒன்று. மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி என்றால் ‘ஒன்பது இரவுகள்’ என்று பொருள். அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி எனப்படுகிறது.
சக்தியை சித்திரை மாதத்தில் வழிபடுவது, ‘வசந்த நவராத்திரி.’ புரட்டாசி மாதத்தில் வழிபடுவது, ‘சாரதா நவராத்திரி.’ சாரதா நவராத்திரியை கொண்டாடுவது எல்லோருக்கும் சிறப்பு தரும். நவராத்திரி வழிபாட்டால் கன்னிப் பெண்கள் திருமண பாக்கியம் பெறுவர். சுமங்கலி பெண்கள் பெறுவது மாங்கல்ய அனுகூலம். மூத்த சுமங்கலிப் பெண்கள் மகிழ்ச்சி, மன நிறைவு, திருப்தி பெறுவர்.நவராத்திரி புரட்டாசி மாத வளர்பிறை பிரதமையில் தொடங்கி, விஜயதசமியில் முடிகிறது. பத்து நாட்கள் கொண்டாடப்படுவதால், ‘தசரா’ என்று அழைக்கின்றனர்.
நவராத்திரியின் சிறப்பம்சம் கொலு வைப்பதேயாகும். இதன் தத்துவம் தாமச குணம், ரஜோ குணம், சத்துவ குணம் ஆகிய மூன்று குணங்களையும் குறிக்கும். முதல் இரண்டு குணங்களை கடந்து சத்துவ குணத்தை அடையும் வழியையே இந்த நவராத்திரி கொலுப்படிகள் நமக்கு உணர்த்துகின்றன. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டும் என்று பார்ப்போம்.

முதலாம் படி: ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள்.
இரண்டாம் படி: ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
மூன்றாம் படி: மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின்
பொம்மைகள்.
நாலாம் படி: நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.
ஐந்தாம் படி: ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள்.
ஆறாம் படி: ஆறறிவு மனிதர்களின் பொம்மைகள்.
ஏழாம் படி: மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.
எட்டாம் படி: தேவர்கள், அஷ்டதிக் பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள்  போன்ற தெய்வங்கள் மற்றும் தேவதைகளின் பொம்மைகள்.

ஒன்பதாம் படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை அவர்களின் தேவியருடன் வைக்க வேண்டும்.

கொலுப்படியின் தத்துவம்

கொலுவில் கீழேயுள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு, பாத்திரம் போன்றவை, தாமச குணத்தைக் குறிக்கும்.அடுத்த மூன்று படிகளில் வைக்கப்படும் அரசர், ராணி, மந்திரி போன்றவை, ரஜோ குணத்தைக் காட்டும். மற்ற மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ உருவங்கள் சத்துவ குணத்தை அடையும் வழியை நமக்குக் காட்டுகின்றன.உலகம் சக்தி மயமானது என்பதை விளக்குவதே நவராத்திரியின் உன்னத தத்துவம். அனைத்து உருவங்களிலும், எல்லா இடங்களிலும் தேவி வியாபித்து இருக்கிறாள் என்பதை குறிக்கும் விதமாகவே கொலு வைத்து வணங்குகிறோம்.

பிரியா மோகன்

The post நவராத்திரி கொலுவின் மகிமை! appeared first on Dinakaran.

Read Entire Article