சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: நவம்பர் முதல் வாரத்திலிருந்து தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இது வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறவும் வாய்ப்புள்ளது. தாழ்வு மண்டலமாக வலுப் பெறும் பட்சத்தில் அது நவம்பர் இரண்டாவது வாரத்தில் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.