?நவகிரகங்களை சனிக்கிழமை நாளில் சுற்றி வணங்குவது மிகச் சிறந்ததா?
– த. சத்தியநாராயணன், அயன்புரம்.
அப்படி எல்லாம் விதிமுறை ஏதும் இல்லை. எல்லா நாட்களிலும் சுற்றி வந்து வணங்கலாம். நவகிரகம் என்றாலே சனி மட்டுமே நம் கண் முன்னால் வந்து நிற்பதால் இதுபோன்ற சந்தேகம் உதிக்கிறது. நவகிரகங்கள் இறைவன் இட்ட பணியைச் செய்து கொண்டிருக்கும் பணியாளர்கள். ஆலயத்தில் பரிவார தேவதைகளில் ஒன்றாக அவர்களையும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். எந்த நாளாக இருந்தாலும் ஆலயத்திற்குச் செல்லும்போது மூலவரை வழிபட்ட பின்பு பிராகாரம் சுற்றி வரும்போது நவகிரகங்களையும் வணங்கிவிட்டு வருவது நல்லது. இதில் கிழமை பேதம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
?அறுபதாம் கல்யாணம் எதற்காக நடத்தப்படுகிறது?
– எம். மனோகரன், ராமநாதபுரம்.
ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி என்பதைத்தான் நாம் அறுபதாம் கல்யாணம் என்கிறோம். அறுபது வயது நிறைவு பெறும்போது செய்யப்படுகின்ற ஒரு சாந்தி பரிகார பூஜை இது. தூரத்தின் அளவு, கொள்ளளவு என நாம் அளந்து சொல்கின்ற குறியீடுகளை பத்தின் மடங்காக திருத்த முடிந்த நம்மால் காலத்தின் அளவை மட்டும் அவ்வாறு திருத்த முடியவில்லை. சாண், முழம், அடி என்று அளவுகளை சொல்லிக் கொண்டிருந்த காலம்போய் தற்போது மில்லி மீட்டர், செண்டிமீட்டர், மீட்டர், கிலோ மீட்டர் என்று பத்தின் மடங்காக தூரத்தின் அளவை அளக்கிறோம். தொலைதூரத்தை அளக்கின்ற மைல் என்ற அளவு கூட தற்போது காணாமல் போய்விட்டது. ஆழாக்கு, படி, மரக்கால், சேர் என்ற அளவுகளும் தற்போது லிட்டர், கிராம் என்ற அளவிற்கு மாறிவிட்டது. ஆனால் காலத்தின் அளவை மட்டும் பத்தின் மடங்காக மாற்ற இயலவில்லை. அறுபது விநாடி ஒரு நாழிகை, அறுபது நாழிகை ஒரு நாள் என்று காலத்தின் அளவினை நிர்ணயித்து வந்தோம். நாழிகை, விநாடி என்று இருந்த கணக்கினை அறுபது செகண்ட் ஒரு நிமிடம் என்றும், அறுபது நிமிடம் என்பது ஒரு மணி நேரம் என்று மட்டுமே நம்மால் மாற்ற முடிந்தது. மற்ற அளவுகளைப்போல பத்தின் மடங்காக நேரத்தினை நிர்ணயிக்க நம்மால் இயலவில்லை. ஆக, காலத்தின் அளவினைப் பொறுத்த வரை அறுபது என்பது ஒரு சுழற்சி. இந்த அடிப்படையில் அறுபது ஆண்டு முடிவடையும் தருவாயில் மனிதன் புனர்ஜென்மம் பெறுகிறான். எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மறுபிறவி என்று கூட சொல்லலாம். அறுபது வயது வரை தான், தனது குடும்பம் என்று வாழ்ந்து வந்த மனிதன், அதற்குப் பிறகு ஞான மார்க்கத்தை நாடி தனது இந்த பிறப்பிற்கான அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும், தன்னைச் சுற்றியுள்ளோருக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என்பதற்காகவும், இந்த மறுபிறப்பினில் அவரது ஆயுள் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படுவதே இந்த ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி.
வயதில் மட்டுமல்லாது, குணத்திலும் சீனியர் சிட்டிசன் ஆக பதவி உயர்வு பெற வேண்டும் என்பதற்காக செய்யப்படுகின்ற ஒரு நிகழ்வு இது. ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தியில் செய்யப்பட வேண்டிய பூஜா விதானத்தை மட்டுமே சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. இதில் மாங்கல்யதாரணம் (தாலி கட்டுதல்) சொல்லப்படவில்லை. தாலி கட்டுதல் என்பது சாஸ்திரத்தில் இல்லை. இது சம்பிரதாயமாக, அதாவது பழக்க வழக்கத்தில் வந்த ஒன்று. பெண்ணின் மாங்கல்ய பலத்தினால் கணவனின் ஆயுளும் நீடிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பழக்கம் உருவாகியிருக்கிறது. தாலி கட்டுவதால் அறுபது ஆண்டு நிறைவு சாந்தி என்பது அறுபதாம் கல்யாணம் என்று பெயர் பெற்றுவிட்டது. உண்மையில் கல்யாணம் என்ற வார்த்தைக்கு பலபேர் கூடி ஒன்றாக இணைந்து செய்கின்ற மங்களகரமான நிகழ்வு என்றுதான் பொருள். இந்த கல்யாணம் என்ற வார்த்தையின் பொருள் தெரியாமல், தற்காலத்தில் நிறையபேர் அறுபதாம் கல்யாணத்தை, திருமண விழா போலவே நடத்துகின்றனர். பிள்ளைகள் செலவு செய்து தங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு பதில் மரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்தாலும் ஒரு சிலர் அதன் உண்மையான பொருள் புரியாமல் முதல்நாள் மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல் என்றெல்லாம் சம்பிரதாயத்தை மாற்றிக்கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி என்பது அவசியம் செய்யப்பட வேண்டிய ஒன்றுதான். அதே நேரத்தில் அதனை முறையாகச் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டு குடும்ப புரோகிதர் அல்லது சாஸ்திரிகளை அணுகி அவரது வழிகாட்டுதலின் பேரில் செய்து
கொள்வதே நல்லது.
?வீட்டில் சிலை வழிபாடு கூடாது என்கிறார்களே, இது சரியா?
– என். இளங்கோவன், மயிலாடுதுறை.
சரியே. கற்சிலைகளை வீட்டில் வைத்து வழிபாடு செய்யக் கூடாது. பஞ்சலோகத்தில் ஆன சிலைகள் கூட அளவில் சிறியதாக இருக்க வேண்டும். அங்குஷ்ட மாத்ரம் என்று சொல்வார்கள். அதாவது அந்தவீட்டின் எஜமானருடைய கட்டைவிரல் அளவிற்கு மிகாமல் இருக்கக்கூடிய சிலைகளை வைத்து வழிபடலாம். அதைவிட அளவில் பெரியதாக சிலைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றிற்குரிய பூஜாவிதானத்தின்படி முறையாக பூஜித்து வரவேண்டும். ஒரு ஆலயம் போல அனைத்துவிதமான உபசார பூஜைகளையும் தினசரி செய்து வழிபட வேண்டும். வீட்டில் இது சாத்தியமில்லை என்பதால் சிலைகளை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது. மரத்தால் செய்யப்பட்ட சிலைகளுக்கு இந்த விதி பொருந்தாது.
?வீட்டுக்கு வருபவர்களுக்கு தாம்பூலம் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. என்ன காரணம்?
தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்குக்கு வழங்கப்படும் பொதுப் பெயர். வீட்டிற்கு சுமங்கலிப் பெண்கள், கன்யா குழந்தைகள் வந்தால் கட்டாயம் தாம்பூலம் தருதல் வேண்டும். குறைந்த பட்சம் மஞ்சள், குங்குமமாவது தர வேண்டும். வெற்றிலையில் முப்பெருந் தேவியரும் வசிப்பதால், வெற்றிலை சத்தியத்தின் சொரூபமாக பார்க்கப்படுகிறது. எல்லா தெய்வ பூஜைகளிலும் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு. அம்பாளை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று தாம்பூலம் தருதல். நிச்சயதார்த்தத்தின்போது சத்தியத்தின் சொரூபமாகிய வெற்றிலை பாக்கை மாற்றி கொள்கிறார்கள்.
?எந்தத் திருடர்களிடம் நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்?
எல்லாத் திருடர்களிடம் இருந்தும் நாம் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய பொருள்களைத் திருடுகின்ற புறத் திருடர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது போலவே, நம்முடைய அறிவையும் ஆத்மாவையும் திருடக்கூடிய அகத்திருடர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்தும் நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும். ஒரு அற்புதமான சுலோகம் இருக்கிறது..
?வடக்கு வாசல் நல்லதா? தெற்கு வாசல் நல்லதா?
எந்த வாசலாக இருந்தாலும் நாம் வாழும்படி வாழ்ந்தால் நல்லது தான். தெய்வபக்தி எத்தனை தோஷங்களையும் போக்கிவிடும் அதனால்தான் அருணகிரிநாதர்” நாள் என்செய்யும்? வினை தான் என் செய்யும்?” என்று பாடினார். அந்தப் பாடலை கஷ்டம் வரும்போது பக்தியோடு ஓதுங்கள். அது எல்லாவிதமான தோஷங்களையும் போக்கி நல்வாழ்க்கையைத் தரும்.
?ஞான ரத்நாப ஹாராய தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா!” இதற்குப் பொருள் என்ன தெரியுமா?
சரீரத்தில் மதிப்பிடற்கரிய ரத்தினம் போன்ற மணிகள் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. காமம், குரோதம், லோபம் ஆகிய திருடர்கள் ஞானமாகிய ரத்தினத்தை அபகரிக்கும் பொருட்டு சரீரத்தில் வசிக்கிறார்கள். ஆகையால் எச்சரிக்கையாக இருங்கள்.
The post நவகிரகங்களை சனிக்கிழமை நாளில் சுற்றி வணங்குவது மிகச் சிறந்ததா? appeared first on Dinakaran.