நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் கைது

3 months ago 18


ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே, நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம்,‌ ஆண்டிபட்டி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி, மதுரை தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் 4ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், ஆயுதபூஜை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். விடுமுறை முடிந்து மீண்டும் மதுரை கல்லூரிக்கு செல்ல, சில தினங்களுக்கு முன் சொந்த ஊரில் இருந்து ஆண்டிபட்டி பஸ்நிலையத்திற்கு ஆட்டோவில் தனியாக வந்தார். அந்த ஆட்டோவை டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்த அழகு முருகன் (34) என்பவர் ஓட்டி வந்தார். டி.சுப்புலாபுரத்தை அடுத்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத டி.ராஜகோபாலன்பட்டி விலக்கு பகுதி சாலையில் வந்தபோது, ஆட்டோவை நிறுத்திய அழகு முருகன், நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து மாணவி ஆட்டோவில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது அழகு முருகன், இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மாணவியை மிரட்டியுள்ளார். அங்கிருந்து தப்பிச் சென்ற மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர் ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், ‘நர்சிங் மாணவிக்கு ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், அழகு முருகனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article