சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நர்சிங் படிப்பு படிக்காதவர்களை பணிமூப்பு அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கிவரும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களாக நியமிக்க முடிவு செய்து அது தொடர்பாக வட்டார துணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் செவிலியர்கள் நியமனத்திற்கான தகுதிகளை எந்தவித முன்னறிவிப்புமின்றி மாற்றியதோடு, நர்சிங் படிக்காதவர்களை பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே செவிலியர்களாக நியமிக்க முயற்சிக்கும் சென்னை மாநகராட்சியின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
ஊட்டச்சத்து ஆலோசனை வழங்குவதற்கும், தடுப்பூசி போடுவதற்கும் பயிற்சி வழங்கப்பட்டிருப்பவர்களை செவிலியர்களாக நியமித்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையில் குறைபாடுகள் ஏற்படுவதோடு நோயாளிகளும் மிகுந்த பாதிப்புக்குள்ளாவர்கள் என எம்.ஆர்.பி செவிலியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
எனவே, போதுமான கல்வித் தகுதி இல்லாதவர்களை பணிமூப்பு அடிப்படையில் செவிலியர்களாக நியமிக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, தேர்வாணையத்தின் மூலம் முறைப்படி தேர்வு செய்யப்பட்டவர்களையே செவிலியர்களாக நியமிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.