திருச்சுழி: நரிக்குடி அருகே, பருத்திக் காட்டில் பஞ்சு எடுக்கும் தொழிலாளர்களுக்கு கை, கால் வீங்கி தோல் உறியும் அழற்சி நோய் ஏற்படுவதால், வேலைக்குச் செல்ல தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து வேளாண்துறையினர், மருத்துவத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள கிழவிகுளம் கிராமத்தில் 130க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், ஊர் அருகே உள்ள கீழக்கொன்றைக்குளம் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.
பருத்திச் செடிகள் வளர்ந்து சுளைகள் வெடிக்கத் தொடங்கிய நிலையில் பஞ்சு எடுக்கும் பணியில் விவசாய கூலித்தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பருத்திக் காட்டில் பஞ்சு எடுக்கும் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் திடீரென கை, கால்களில் அரிப்பு ஏற்பட்டு வீங்கி புண்ணாகி வருவதாக கூறப்படுகிறது. கிழவிகுளத்தை சேர்ந்த பெரும்பாலான தொழிலாளர்களும், விவசாயிகளும் இந்த பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால், கூலியாட்கள் வேலைக்கு வருவதற்கு அச்சப்படுவதால், பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, கிராமத்தில் வேளாண்துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நரிக்குடி அருகே பருத்தி எடுக்கும் தொழிலாளர்களுக்கு அழற்சி நோய்: கை, கால் வீங்குவதால் வேலைக்கு வருவதற்கு அச்சம் appeared first on Dinakaran.