மதுரை,
மதுரையில் அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. அதில் திரைப்பட நடிகையும், அ.தி.மு.க. மகளிர் அணி துணைச் செயலாளருமான காயத்ரி ரகுராம் பங்கேற்று பேசியதாவது:-
சமூக நீதி, சமூக நீதி என சொல்லும் தி.மு.க. சிறுபான்மையினருக்கு என்ன செய்துள்ளது. தனுஷ் நயன்தாரா பிரச்சனை இன்று விவாத மேடையில் செல்கிறது அதுவா நாட்டிற்கு முக்கியம்? நயன்தாரா நடித்து சம்பாதித்தால் என்ன, திருமண வீடியோவை விற்று சம்பாதித்தால் என்ன? தனுஷ் கூட சண்டை போட்டால் என்ன? போடாவிட்டால் என்ன? இது தி.மு.க.வின் திசைதிருப்பும் வேலை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.
ஆனால் இன்று போதைப் பொருள் ஒரு சாக்லேட் போல சாதாரணமாக அனைத்து மாணவர்களின் கைகளிலும் கிடைக்கிறது. மதுரையில் சாலைகள் மோசமாக இருக்கிறது. எந்த திட்டமும் மக்களுக்கு கிடைக்கவில்லை. படித்த திறமை வாய்ந்த ஒரு அமைச்சர் மதுரையில் இருந்தார். அவரும் தற்போது சைலன்ட் மோடுக்கு சென்று விட்டதால் மதுரை மக்கள் தி.மு.க. ஆட்சியில் திண்டாடி வருகிறார்கள்.
பெண்களுக்கு எதிரான ஒரு அரசு என்றால் அது தி.மு.க.தான். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை திட்டம் என மக்கள் பயன்பெறும் திட்டத்தை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தி விட்டனர். மக்களுக்கு தேவையான ஒரு நல்ல திட்டம் கூட தி.மு.க. அரசு செய்யவில்லை. சத்துணவு திட்டம் எம்.ஜி.ஆர் கொண்டு வந்தார். தற்போது காலை உணவு திட்டத்தில் எந்த ஒரு தரமும் இல்லை.
விளம்பரத்தில் மட்டும் தி.மு.க. வேற லெவலில் உள்ளது. மக்களுக்கான திட்டங்களில், செயல்பாடுகளில் ஒன்றும் இல்லை. உதயநிதி ஒரு செங்கலை வைத்து எல்லாரையும் ஏமாற்றி விட்டார். 2026-ம் ஆண்டு தி.மு.க.வை மக்கள் நிச்சயமாக வீட்டிற்கு விரட்டி அடிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.