‘‘இலை கட்சி எம்எல்ஏக்கு என்ன ஏமாற்றமாம்..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாநகரில் இலைக்கட்சிக்கு செல்வாக்குள்ள பகுதி செயலாளர் பதவி ஒன்னு காலியாக இருந்ததாம். இந்த பதவியில 20 வருஷமா ஒருத்தரே இருந்தாராம். அவரு இறந்ததால காலியான அந்த பதவிக்கு மக்கள் பிரதிநிதி ஒருத்தர் ரொம்ப ஆர்வமா இருந்தாராம். வார்டு பகுதியில போய் கட்சிக்காரங்ககிட்ட ஆதரவா கையெழுத்தெல்லாம் வாங்கினாராம்.
அதே மாதிரி புதிய பொறுப்பை எதிர்பார்த்து, அப்பகுதியை சேர்ந்த அம்மா பெயர் கொண்ட அணியில் முக்கிய பொறுப்பில் இருப்பவரும் காத்திருந்தாராம். ஆனா, கட்சியின் தலைவரு அப்பொறுப்பிற்கு புதியவர் ஒருவரை தேர்வு செஞ்சி அறிவிச்சிட்டாராம். அவரு பசை பார்ட்டியாம். இதனால அந்த மக்கள் பிரதிநிதி பெருத்த ஏமாற்றம் அடைந்து விட்டாராம். தனது உள்ளக்குமுறலை கட்சி தலைமையிடமும் சொன்னாராம். அவரோ கூலாக இந்த பதவியெல்லாம் உங்களுக்கு ஆகாதுங்க…
மாவட்ட அளவில வேற தர்றோம்னு சொல்லிட்டாராம். அவருக்கு கட்சியில் எந்த முக்கிய பொறுப்பும் இல்லையே என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பான பேச்சா இருக்காம். அதேநேரத்துல புதிய பொறுப்பு பற்றி தலைவரே சொன்னதால எப்படியும் பதவி கிடைச்சிரும்னு நம்பிக்கையோட இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாஜி மந்திரிகளின் போராட்டத்துக்கு ஆதரவே இல்லையாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகர் பகுதியில் இலைக்கட்சியினர் ஏற்கனவே நடத்திய உண்ணாவிரத போராட்டம் பிசுபிசுத்து போன நிலையில், சேலத்துக்காரரிடம் கெஞ்சாத குறையாக அனுமதி வாங்கி, வரும் அக். 9ல் மீண்டும் ஒரு உண்ணாவிரத போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள்.
இவர்கள் நடத்தும் இப்போராட்டத்திற்கு சொந்தக் கட்சிக்காரர்களிடமே ஆதரவில்லையாம். வேலைவாய்ப்பு, புதிய திட்டங்கள் என ஆளும் அரசு ஸ்கோர் செய்து கொண்டிருக்க, ஆளும் அரசை குறை சொல்லி நடத்தும் எந்த போராட்டமும் எடுபடுவதில்லை. ஏற்கனவே கள்ளர் பள்ளிகள் விவகாரத்தில் தேவையில்லாமல் உண்ணாவிரதமிருந்து மூக்கை நுழைத்து அறுபட்டுக் கொண்ட நிலையில், இதெல்லாம் தேவைதானா என இலைக்கட்சித் தொண்டர்களே இப்போது புலம்பி வருகின்றனர்.
அரசியல் செய்தே ஆக வேண்டுமென்பதற்காக கொஞ்சமும் சத்தில்லாத கோரிக்கைகளுடன் இலைக்கட்சியின் மாஜிக்களான உதயமானவரும், தெர்மகோலும், செல்லமானவரும் இப்படி அடிக்கடி போராட்டங்களை கையிலெடுத்து, கட்சி வளர்ச்சியை கண்டுக்காம விட்டுடுறாங்க.. எதிர்த்துக்கிட்டே இருக்குறதுலயாங்க கட்சி வளரும், உள்கட்சியின் கோஷ்டி பூசலையெல்லம் சரி செஞ்சு ஒண்ணுமண்ணா உழைச்சாதானுங்களே கட்சியை காப்பாத்தலாம் என்று இந்த மும்மூர்த்திகள் காதுபடவே கட்சி நிர்வாகிகள் கேள்விக் கணைகளை தொடுத்து வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வைத்தியானவருடன் டெல்டா மாவட்ட இலை கட்சியின் நிர்வாகிகள் ரகசிய சந்திப்பாமே..’’ என்று ஆர்வத்துடன் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நெற்களஞ்சிய மாவட்ட மாஜி அமைச்சர் வைத்தியானவர் தேனிக்காரர் அணியில் இருந்து வருகிறார். சேலத்துக்காரரிடம் இருந்து பிரிந்து சென்றாலும் டெல்டா மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சி நிர்வாகிகள் வைத்தியானவருடன் தற்போது வரை தொடர்பில் இருந்து வருகின்றனர். அவ்வப்போது வைத்தியானவரை ரகசியமாக சென்று சந்தித்து வருகின்றனர்.
அதிகாலை நேரத்தில் வைத்தியானவரின் வீட்டுக்கு சென்று இந்த சந்திப்பு நடந்து வருகிறது. இந்த தகவல் தெரிய வந்த மாஜி அமைச்சர்கள், நிர்வாகிகளை பெருசா கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களாம்… இந்த சந்திப்பு பற்றி சேலத்துக்காரரின் கவனத்துக்கு மூத்த நிர்வாகிகள் கொண்டு சென்றனர். சேலத்துக்காரர் உத்தரவின் பேரில் அவரது டீம் வைத்தியானவரை ரகசியமாக சந்திக்கும் நிர்வாகிகள் யார் என கண்டு பிடிக்க திரைமறைவான வேலையில் இறங்கியுள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேசிய நெடுஞ்சாலையில் என்ன விவகாரமாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர்பத்தூர் மாவட்டம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல மாவட்ட மலர் பார்ட்டியில யூத் அணி பிரசிடெண்டுக்கு சொந்தமாக லாட்ஜ் இருக்குதாம். இங்க பெங்களூர்ல இருந்து அழகிகளை வரவெச்சி, தொழில் நடந்திருக்குது. அடிக்கடி பல கார்கள் வருவதால ஏரியா மக்களுக்கு சந்தேகம் வந்திருக்குது. இந்த சந்தேகம் காக்கிகளுக்கும் வரவே, சில நாட்களுக்கு முன்னாடி ரெய்டு நடத்தியிருக்காங்க. அதுல புரோக்கரு, மேனேஜருன்னு 2 பேரை சிறைக்கு அனுப்புனாங்க.
விசாரணையில பல மாதங்களாக இந்த தொழில் நடந்து வர்றது வெளிச்சத்துக்கு வந்திருக்குது. முக்கிய புள்ளிகள் பின்னணியில செயல்பட்டதாக சொல்றாங்க. விரைவுல முக்கிய புள்ளிகள் சிக்குவாங்கன்னு பேசிக்கிறாங்க. சம்மந்தப்பட்ட பார்ட்டிகள் நாமளும் சிக்கிடுவோமோன்னு அச்சமா இருக்காங்களாம். இதுல, போனவாரம் தான் வெயிலூர் மாவட்டத்துல, குட்டி சிவகாசி பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல குக்கர் பார்ட்டிக்கு சொந்தமான லாட்ஜ்ல ரெய்டு நடத்தி கையும் களவுமாக சிக்குனாங்க.
இப்ப மலர் பார்ட்டியும், குக்கர் பார்ட்டியும் கூட்டணி வெச்சிருக்காங்களேன்னு 2 பார்ட்டிகள்ல இருந்தே வசைபாடி வர்றாங்களாம். அதோட மலர், குக்கர் பார்ட்டிகளால் சென்னை- பெங்களூரு என்எச்களை டச் செய்யும் லாட்ஜ்கள் ஹாட்டாக மாறிடுச்சாம். இதனால என்எச் லாட்ஜ்களின் கண்காணிப்பை காக்கிகள் அதிகமாக்கிட்டாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
The post நமுத்துப்போன போராட்டங்கள் நடத்தும் மாஜி மந்திரிகள் மீது கடுப்பில் இருக்கும் கட்சியினரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.