
'சிவாய நம' என சிந்தித்து இருப்போருக்கு ஒரு நாளும் அபாயம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. சிவராத்திரி தினத்தில் இரவில் சிவபெருமானை வேண்டி 4 ஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது. மாலை 6.30 மணி, இரவு 9.30 மணி, நள்ளிரவு 12,30 மணி, அதிகாலை 3 மணி ஆகிய நேரங்களில் சிவலிங்க அபிஷேகம் செய்யப்படுகிறது.
முதல் காலத்தில் சிவனுக்கு பிரம்மா பூஜை செய்வதாக ஐதீகம். இந்த காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் பிறவியில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.
மகாவிஷ்ணு 2-வது கால பூஜையை செய்வதாக ஐதீகம். இந்தக்காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் தன, தானிய சம்பத்துகள் சேரும் என்பது ஐதீகம்.
மூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவாக அம்பாள் செய்வதாக ஐதீகம். இதை லிங்கோத்பவ காலம் என்பர். சிவபெருமானின் அடி, முடியை காண வேண்டி பிரம்மா அன்ன பறவை வடிவில் மேலேயும், மகா விஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் எந்த வித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் நான்காவது காலத்தில் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. அப்போது விரதம் இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும். இல்லறம் இன்பமாக திகழும். நினைக்கின்ற காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
சிவபெருமானை போற்றி வணங்கும் சிவராத்திரிகளில் மகா சிவராத்திரி முதன்மையானது. மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி நாள் மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா நன்மைகளையும் இது ஒரு சேர வழங்கிவிடுவதால் இது மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. எனவே மற்ற சிவராத்திரிகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட மகா சிவராத்திரியன்று விரதம் மேற்கொண்டு சிவபெருமானை பூஜிப்பது வழக்கம். இந்த ஆண்டு மகா சிவராத்திரி, நாளை மறுநாள் (26.2.2025) கொண்டாடப்படுகிறது.