மீனம்பாக்கம்: மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானம் நடுவானில் பறந்தபோது, 58 வயதான ஒரு பெண் பயணி திடீர் மாரடைப்பினால் சீட்டில் தூங்கிய நிலையிலேயே பரிதாபமாக பலியானார். இதனால் சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு நிலவியது. சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கலையரசி (58). இவரது மகள், ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன் கலையரசி ஆஸ்திரேலியா சென்று மகள் வீட்டில் தங்கியிருந்தார். பின்னர், ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்புவதற்காக, ஆஸ்திரேலியாவில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோலாலம்பூர் வந்து, அங்கிருந்து மற்றொரு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக நேற்றிரவு சென்னைக்கு கலையரசி வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், கோலாலம்பூரில் இருந்து வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்றிரவு 11.10 மணியளவில் சென்னை சர்வதேச விமான முனையத்தில் தரையிறங்கியது. விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் இறங்கினர். எனினும், விமான இருக்கையில் கலையரசி மட்டும் தலையை சாய்த்து தூங்குவது போல் இருந்துள்ளார். இதை பார்த்த விமான பணிப்பெண்கள், அவரிடம் சென்னைக்கு விமானம் வந்துவிட்டது. கீழே இறங்குங்கள் என்று கூறியுள்ளனர். எனினும், அவரிடம் இருந்து எவ்வித பதிலும் வராததால் தொட்டுப் பார்த்தபோது, கலையரசியின் தலை சாய்ந்தது. இதுகுறித்து விமான கேப்டனுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானநிலைய மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, கலையரசியை பரிசோதித்தனர். இதில், அந்த விமானம் நடுவானில் பறந்தபோது, கடும் மாரடைப்பினால் கலையரசிக்கு தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருப்பது தெரியவந்தது. சென்னை விமானநிலைய போலீசார், கலையரசியின் சடலத்தை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரிக்கின்றனர். இதற்கிடையே கோலாலம்பூரில் இருந்து நேற்றிரவு வழக்கம் போல் 11 மணிக்கு சென்னை வந்துவிட்டு, இங்கிருந்து மீண்டும் நள்ளிரவு 12 மணியளவில் கோலாலம்பூர் புறப்பட வேண்டிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் 267 பயணிகளுடன் கோலாலம்பூருக்குப் புறப்பட்டு சென்றது.
The post நடுவானில் விமானம் பறந்தபோது பெண் பயணி மாரடைப்பால் பரிதாப பலி appeared first on Dinakaran.