ராமேஸ்வரம்: பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது என ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் சேசுராஜா தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று இலங்கைக்கு வருகை தந்தார். இன்று கொழும்பு நகரில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக உடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார். மீனவர் பிரச்சனை தொடர்பாக இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தை பற்றி வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார். மீனவர் பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். சிறையில் உள்ள 11 மீனவர்களை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இந்நிலையில் பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது என ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் சேசுராஜா தெரிவித்துள்ளார். மோடியின் இலங்கை பயணத்தின்போது சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் வெறும் 11 மீனவர்களை மட்டும் விடுவிப்பதாக இலங்கை அரசு கூறியிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்து மனு அளித்தோம். மோடியின் பயணத்தின்போது மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என ஒன்றிய அரசு உறுதி அளித்தது; ஆனால் அது நடக்கவில்லை. பிரதமர் மோடி, உடனே வெளியுறவுத்துறை மூலம் இலங்கை அரசிடம் பேசி சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருவதற்குள் மீனவர்கள் விடுவிக்கப்பட்டால் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என்று கூறினார்.
The post பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது: ராமேஸ்வரம் மீனவர்கள் appeared first on Dinakaran.