
ராஞ்சி
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் தடிசில்வாலி பகுதியில் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் சுற்றித்திருந்த நாய்கள் அப்பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளன.
இந்நிலையில், தெருநாய் தொல்லை அதிகரித்து வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பிரதீப் பாண்டே நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த தெருநாய் பிரதீப்பை கடிக்க துரத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து ஓடியுள்ளார்.
நாய் துரத்தியதால் ஆத்திரமடைந்த பிரதீப் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துவ் அந்த பிரதீப் நடுரோட்டில் நின்றுகொண்டிருந்த அந்த நாயை சுட்டுக்கொன்றார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதையடுத்து தெருநாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பிரதீப்பை போலீசார் கைது செய்தனர்.
இந்தியாவில் நாயை கொல்வது சட்டப்படி குற்றமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். சில வழக்குகளில் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க சட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.