சென்னை,
கடந்த 2012-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்பின்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பார்வதி நாயர். அதனைத்தொடர்ந்து, தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பார்வதி நாயர், விஜய்யின் 'தி கோட்' படத்திலும் நடித்திருந்தார். தற்போது 'ஆலம்பனா' என்கிற திரைப்படம் இவருடைய நடிப்பில் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. அதே சமயம் சில சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத பிரபலமாக பார்க்கப்பட்டு வரும் பார்வதி நாயருக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
பார்வதி நாயர் தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் தற்போது நடந்து முடிந்துள்ள நிலையில், இதுபற்றிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இவர்களின் திருமண தேதி குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'என் வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க நான் ஆவலுடன் இருக்கிறேன். ஆஷ்ரித்தை ஒரு விருந்தில் தற்செயலாக சந்தித்தேன். நாங்கள் அன்று பேச ஆரம்பித்தோம். ஆனால் உண்மையாக நெருங்கி வர சில மாதங்கள் ஆனது. தற்போது இருவரும் காதலித்து வருகிறோம். பெற்றோர் சம்மதத்துடன் எங்கள் திருமணம் மலையாள மற்றும் தெலுங்கு பாரம்பரிய முறைப்படி நடைபெற உள்ளது. வருகிற 6-ந்தேதி தொடங்கும் ஹல்தி, மெஹந்தி மற்றும் சங்கீத் போன்ற திருமணத்திற்கு முந்தைய அனைத்து விழாக்களும் சென்னையில் நடைபெறும். திருமணத்திற்குப் பிந்தைய வரவேற்பு கேரளாவில் நடத்த முடிவு செய்து உள்ளோம்' என் பார்வதி நாயர் கூறியுள்ளார்.