
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு கல்யாண் நகர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பிரபலங்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் போதை விருந்து நடந்தது. இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி திரை பிரபலங்கள், தொழில் அதிபர்களின் குடும்பத்தினர் என பலரை கைது செய்தனர். இதில் அங்கீத் என்பவரும் ஒருவர் ஆவார். மேலும் போதை விருந்து தொடர்பாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, தயாரிப்பாளர் சிவப்பிரகாஷ் உள்பட பலரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக நடிகை சஞ்சனா கல்ராணி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து நடிகை சஞ்சனா கல்ராணி மற்றும் தயாரிப்பாளர் சிவபிரகாஷ் ஆகியோர் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் தனி நீதிபதி அமர்வில் நடந்துவந்தது. ராகினி திவேதியை உயர் நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது.
இந்நிலையில் கன்னட திரைப்பட நடிகை சஞ்சனா கல்ராணியை போதைப்பொருள் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுவித்தது. வழக்கில் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கண்டறிந்த நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்கில் சட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருந்தது. இதனை தொடர்ந்தே நடிகை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் 2020ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட சஞ்சனா கல்ராணி 5 ஆண்டு சட்ட போராட்டத்துக்கு பின் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
சஞ்சனா கல்ராணி கன்னடம் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, தமிழ் திரைப்படங்களிலும் பல படங்களில் நடித்துள்ள தென்னிந்தியாவின் முன்னணி நடிகை ஆவார். கசாநோவா, தி கிங் அண்ட் கமிஷனர் ஆகியவை அவர் நடித்த மலையாள திரைப்படங்கள். இவர் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியுமாவார்.