சென்னை: சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்க சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தன்னை பற்றி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வடிவேலுவுக்கு எதிராக இனிமேல் அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என்று நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி இடைக்கால மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் பிரதான சிவில் வழக்கு விசாரணையில் சிங்கமுத்து தரப்பில் ஆஜராகி பதில் மனு இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஒருதலைப் பட்ச தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சிங்கமுத்து சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனக்கு 67 வயதாகிவிட்டது. உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வருகிறேன். அதனால் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை. எனவே ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, பிரதான வழக்கில் விதிக்கப்பட்டிருந்த உத்தரவை நீக்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் சிங்கமுத்து தரப்புக்கு 2500 ரூபாய் அபராதம் விதித்து அதை வடிவேலு தரப்புக்கு செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
The post நடிகர் வடிவேலு தொடர்ந்த மானநஷ்டஈடு வழக்கு; நடிகர் சிங்கமுத்துவுக்கு அபராதம் appeared first on Dinakaran.