சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்த நாளை ஒட்டி அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் 1927 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 1 ஆம் நாள் பிறந்தார். குழந்தைப் பருவம் முதற்கொண்டே நடிப்பதில் பேரார்வம் கொண்டு, பல்வேறு நாடக குழுக்களில் பங்கேற்று நடித்து வந்தார்.
அண்ணாவால் எழுதப்பட்ட “சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” என்கிற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின் நடிப்புத் திறமையினைக் கண்ட பெரியார் வியந்து பாராட்டியதோடு, விழுப்புரம் சின்னையப் பிள்ளை கணேசன் என்ற அவரது இயற்பெயரை “சிவாஜி கணேசன்” என்று பெயர் சூட்டினார். உலகப் புகழ்பெற்ற நடிகர் திலகத்திற்கு இந்த பெயரே இறுதிவரை நிலைத்து நின்றது.
இந்த நிலையில், அன்னாரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை 10.00 மணிக்கு சென்னை அடையார். தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு, அரிய புகைப்படத் தொகுப்புகளுடன் புகைப்படக் கண்காட்சியையும் முதலமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
The post நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை..!! appeared first on Dinakaran.