மும்பை,
பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் (வயது 54) மும்பை மேற்கு பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். 11-வது தளத்தில் உள்ள அவரது வீட்டுக்குள் புதன்கிழமை இரவு மர்ம நபர் ஒருவர் புகுந்தார். கொள்ளையடிக்கும் நோக்கில் அவர் வீட்டுக்குள் நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மர்ம நபரை பிடிக்க முயன்ற சயிப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு அந்த நபர் தப்பி ஓடினார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சயீப் அலிகானை குடும்பத்தினர் மீட்டு ஆட்டோ மூலம் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சயீப் அலிகானின் உடலில் 6 இடங்களில் ஏற்பட்ட கத்தி குத்து காயங்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி நலமுடன் உள்ளார்.
இந்தநிலையில் சயீப் அலிகான் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் தச்சு தொழிலாளி ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் சயீப் அலிகான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர் போலவே இருந்தார். எனவே அவர் தான் நடிகரை கத்தியால் குத்தியவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். ஆனால் இந்த சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இல்லை என்று தெரியவந்தது. இதனால் அவர் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து குற்றவாளியை பிடிக்க போலீசார் இதற்காக 30 தனிப்படைகள் அமைத்துள்ளனர். சயீப் அலிகான் மீதான தாக்குதல் கொள்ளை முயற்சியில் தான் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா?, நிழல் உலக தாதா கும்பல்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகங்கள் நிலவுகின்றன. ஆனால் கொள்ளை முயற்சியில் தான் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் கூறுகிறார்கள் . சயீப் அலிகான் வழக்கில் போலீசாருக்கு பல தகவல்கள் கிடைத்து இருப்பதாகவும், போலீசார் விரைவில் குற்றவாளியை நெருங்கி விடுவார்கள் என்றும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.